×

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுவரும் கட்டுமான பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர். ஜி.கே.எம்.காலனியில் உள்ள சுப்பிரமணியன் தெருவில் வீதி, வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது;
தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரியான தொகுதியாக ஒன்றியத்தில் முன் மாதிரி முதல்வராக விளங்கக்கூடிய மு.க.ஸ்டாலின், பார்த்து பார்த்து இந்த தொகுதியில் இருக்கக்கூடிய மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக 500 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. எம்ஆர்ஐ, சி.டி ஸ்கேன் உள்ளிட்டவற்றை கொண்ட சிறப்பு வாய்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தமாக 750 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையாக திகழும். டி.எம்.எஸ் கீழே இந்த மருத்துவமனை உள்ளது.

புதிதாக மேலும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த தொகுதியில் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 1ம் தேதி முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாத இறுதியில் இந்த மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்படும். திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தரின் செல்போன் உண்டியலில் விழுந்தது குறித்து இன்று நல்ல முடிவு எடுக்கப்படும். கடந்த ஆட்சி கிள்ளி கொடுக்காத ஆட்சி. இந்த ஆட்சி அள்ளிக் கொடுக்கக்கூடிய ஆட்சி.இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த பேட்டியின்போது, பகுதி செயலாளர்கள் ஐசிஎப்.முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் உள்பட பலர் இருந்தனர்.

The post திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruporur Murugan Temple Undiyal ,Minister ,B. K. ,Sekarpapu ,Perampur ,P. K. Sekarpapu ,Chennai ,Mayor ,Priya. G. K. M. ,B. K. Sekharbabu ,
× RELATED திருப்போரூர் முருகன் கோயில்...