ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மதகு மற்றும் மழைநீர் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியானது 40 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய போதுமான தண்ணீர் இந்த ஏரியில் இருந்து வந்தது.
ஏலகிரி மலையில் இருந்து ஓடைகளாக வரும் மழைநீர், கிராம பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் போன்றவை கால்வாய் மூலம் ஏரியில் நிரம்பி பின்னர் மதகு மூலம் விவசாய நிலங்களுக்கு திறக்கப்பட்டு அதிகளவில் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் ஏலகிரி மலையில் இருந்து ஓடைகளாக வரும் கால்வாய்கள், ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாய்கள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்கள் இல்லாமல் வீணாகி விடுகிறது. இதனால் ஏரிக்கு வரும் மழைநீர் வராமல் ஏரி நிரம்புவதில்லை. இதனால் ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதை தவிர்த்து சுயதொழிலுக்கும், கூலித்தொழிலுக்கும், வெளியூருக்கும் சென்று சம்பாதிக்கும் நிலை தள்ளப்பட்டுள்ளனர். சிலர் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக அமைத்து விற்று விட்டு செல்கின்றனர்.
இதனால் ஏரி காய்ந்த நிலை ஏற்படும்போது ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிகளையும் விட்டு வைக்காமல் அதையும் ஆக்கிரமித்து 40க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி தற்போது 25 ஏக்கர் பரப்பளவிற்கு சுருங்கி காணப்படுகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய், மழைநீர் கால்வாய், ஓடை கால்வாய் போன்றவற்றை சீரமைத்து ஏரியை தூர்வாரி நிலத்தடி நீர் அதிகரிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post 40 ஏக்கர் 25 ஏக்கராக சுருங்கியுள்ளது; ஜோலார்பேட்டை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.