பூங்குளம் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா, நிலம் வழங்குவதில் முறைகேடு: சப்-கலெக்டரிடம் புகார்

 

பொன்னேரி: பூங்குளம் ஊராட்சியில் கிராம மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை, சின்ன மாங்கோடு கிராம மக்களுக்கு அளந்து கொடுக்கும் பணி நடப்பதை கண்டித்து, பொன்னேரி சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு வழங்கினர். பொன்னேரி தாலூகாவிற்கு உட்பட்ட, பூங்குளம் ஊராட்சியில் ரெட்டிபாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயம், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், போதிய இட வசதியின்றி, வீடுகள் இல்லாமல் இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதே பகுதியில் ஆதிதிராவிட மக்களும், இருளர் காலனி மக்களும் வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக தங்கள் கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள சின்ன மாங்கோடு பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து கொடுப்பதற்கான பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், இதனால், தங்கள் கிராமத்திற்குள் சமூக ரீதியான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல், வீடு இல்லாமல் தவிக்கும் தங்கள் கிராம மக்களுக்கு நிலத்தினை அளந்து தருமாறும், சின்ன மாங்கோடு மக்களுக்கு அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இடத்தை வழங்குமாறும் கோரி பொன்னேரி சப்-கலெக்டர் வாஹ் சன்கேத் பல்வந்த்திடம் ரெட்டிபாளையம் கிராம மக்கள் புகார் மனு வழங்கினர். புகாரை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post பூங்குளம் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா, நிலம் வழங்குவதில் முறைகேடு: சப்-கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: