பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன், ராமச்சந்திராபுரம் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பெண்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், பள்ளிப்பட்டு-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகள் விரிவுப்படுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன், ராமச்சந்திராபுரம் ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்பை கைவிடக்கோரி ராமச்சந்திராபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று வட்டாட்சியர் அலுவலக பகுதியில் பள்ளிப்பட்டு-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, திருத்தணி டிஎஸ்பி கந்தன், தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து, கிராம மக்கள் கோரிக்கை தொடர்பாக அரசு பார்வைக்கு கொண்டு சென்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியதை ஏற்று, சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதே நேரத்தில், பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன் ராமச்சந்திராபுரம் இணைப்பை கைவிடக்கோரி திமுக கிளை செயலாளர் மீசை வெங்கடேசன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கினார்.
The post பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு: பெண்கள் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.