பீஜிங்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 5 ஆண்டுகளான நிலையில் சீனாவில் வேகமாக பரவும் ‘மெட்டா நியூமோ’ வைரசால் மக்கள் பீதியடைந்து மருத்துமனைகளில் குவிந்து வருகின்றனர். உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பரவி ஐந்து ஆண்டுகளான நிலையில், தற்போது சீனாவில் மனிதர்களை தாக்கும் புதிய வகை வைரசான மெட்டா நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி) வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாக சீனாவின் முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் தகன மேடைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதால் மருத்துவ அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் எக்ஸ் பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘கொரோனா தொற்றுநோய் போன்று புதிய வகை தொற்று நோய் சீனாவில் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இன்ப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் வேகமாக பரவி வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
தற்போது வேகமாக பரவி வரும் எச்.எம்.பி.வி என்ற வைரஸ் தொற்றை மனித மெட்டா நியூமோவைரஸ் (எச். எம். பி. வி) என்று அழைக்கின்றனர். இந்நோய் பாதித்தவர்களுக்கு முதலில் ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் தோன்றும். பின்னர் அந்த ஜலதோஷ தொற்று காற்றில் பரவி வைரஸ் தொற்றாக பரவும். பெரும்பாலும் இந்த வைரஸ் பரவினால் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. நிமோனியா, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களுக்கு எளிதில் தொற்றும். நாள்பட்ட நுரையீரல் நோய் பாதித்தவர்களுக்கும் உடனடி பாதிப்பை ஏற்படுத்தும். மனித மெட்டா நியூமோவைரஸ் என்ற நோய் கிருமியானது ஆர்எஸ்வி, தட்டம்மை மற்றும் புட்டாளம்மை ஆகியவற்றை உருவாக்கும் வைரஸ்களின் கூட்டு குழுவின் ஒரு பகுதியாகும்.
இந்நோயினால் மூச்சுத் திணறல் (டிஸ்பெனியா), மூக்கு சளி ஒழுகுதல், தொடர் இருமல் ஏற்படும். இந்த வைரஸ் தொற்றானது நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களைத் தொடுவதன் மூலமாகவோ பரவுகிறது. உதாரணமாக, இருமல், தும்மல், கைகுலுக்குதல் அல்லது கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. மனிதர்களை தாக்கும் மெட்டா நியூமோவைரஸுக்கு தற்போதைக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவற்றை திறம்பட நிர்வகிக்க சில வழிகள் உள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புக்கு நேரடியாக வழங்கப்படும் திரவங்கள் (ஐவி), ஆக்ஸிஜன் சிகிச்சை, கார்டிகோஸ்டீராய்டுகள், ஸ்டெராய்டுகள் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்க முடியும் என்கின்றனர்.
இதுகுறித்து சீனாவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம் ெவளியிட்ட அறிக்கையில், ‘எச்.எம்.பி.வி நோய் தொற்று பரவல் குறித்து முழுமையாக விசாரித்து வருகிறோம். தொற்று பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்ததில் நிமோனியா நோயின் அறிகுறிகள் இருந்தன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த முறை கொரோனா வைரஸ் போன்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே மக்கள் பீதியடைய வேண்டியதில்லை. சீனாவில் டிசம்பர் 16 – 22ம் தேதிக்கு இடையில் தான் இந்த நோய்த்தொற்று அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்கால மாதங்களில் சீனாவில் இதுபோன்ற நோய் தொற்று பாதிப்புகள் அதிகமாவது வழக்கம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த அறிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இன்னொரு வைரஸ் வேகமாக பரவி வருவதும், மக்கள் கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதும் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தால் சீனாவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுவதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அச்சப்பட தேவையில்லை
சீனாவில் மெட்டா நியூமோ வைரஸ் பரவி வருவது குறித்து ஒன்றிய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகையில்,’ நமது நாட்டில் சுவாச பிரச்னைகள் மற்றும் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை ஒன்றிய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீனாவில் மனித மெட்டா நியூமோவைரஸ் பரவியது தொடர்பான தகவல்களையும் கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சுகாதார சேவை இயக்குனர் ஜெனரல் டாக்டர் அதுல் கோயல் கூறுகையில், ‘மனித மெட்டா நியூமோவைரஸ் மற்ற சுவாச வைரஸ் போன்றது. இது ஜலதோஷம், காய்ச்சலை ஏற்படுத்துகிறது. நமது நாட்டில் எந்தபிரச்னையும் இல்லை. எனவே இந்தியாவில் புதிய வைரஸ் குறித்து அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நமது நாட்டில் குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் நம்மிடம் உள்ளன’ என்றார்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
* எச்எம்பிவி வைரஸ் முதன்முதலாக உலகில் 2001ல் கண்டுபிடிக்கப்பட்டது.
* இருமல், காய்ச்சல், நாசி எரிச்சல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகள்
* அதிக பாதிப்பு ஏற்பட்டால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்பு உண்டு.
* இந்த வைரஸ் பாதிப்பு பொதுவாக மூன்று முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும்
* வைரஸ்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கும் நாட்கள் அதிகரிக்கும்.
* குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
மெட்டா நியூமோ எப்படி பரவும்
* இருமல், தும்மல், கைகுலுக்குதல் அல்லது கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
* அசுத்தமான இடங்களைத் தொட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொட்டாலும் பரவும்.
* மனிதர்களை தாக்கும் மெட்டா நியூமோவைரஸுக்கு தற்போதைக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை.
எவ்வாறு தடுக்கலாம்?
* குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு தேய்த்து கைகளை தவறாமல் கழுவ வேண்டும்.
* கழுவப்படாத கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நோய் அறிகுறி உள்ளவர்களிடமிருந்து இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
* கதவு கைப்பிடிகள் மற்றும் பொம்மைகள் போன்ற அடிக்கடி தொடும் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
வைரஸ் பரவினால் என்ன செய்ய வேண்டும்?
* தும்மும்போது அல்லது இருமும்போது, வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.
* தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
* உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
* மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க வீட்டிலேயே ஓய்வெடுப்பது நல்லது.
கொரோனாவுக்கும், எச்எம்பிவி வைரசுக்கும் என்ன ஒற்றுமை?
* இருமல், காய்ச்சல், மூக்கு எரிச்சல், தொண்டை புண், மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளை எச்எம்பிவி மற்றும் கோவிட்-19 இரண்டும் ஏற்படுத்துகின்றன. இவை இரண்டும் சுவாசத் துளிகளால் பரவுகின்றன.
* கடுமையான பாதிப்பு இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். பொதுவாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் உச்சத்தை அடைகிறது.
* கொரோனா போல் இல்லாமல் எச்எம்பிவி வைரஸ் ஆண்டு முழுவதும் பரவுகிறது.
* கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு சில பகுதிகளில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்புகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு அனைவரும் வரலாம்
சீனாவில் மெட்டா நியூமோ வைரஸ் பரவி வரும் தகவலால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில்,’சீனாவில் குளிர்காலத்தில் இதுபோன்ற நோய்கள் வருவது சகஜம்தான். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுவாச நோய்களின் பாதிப்புகள் குறைவாக உள்ளன. வெளிநாட்டினர் சீனாவுக்கு வருவது பாதுகாப்பானது. தற்போது பரவும் மெட்டா நியூமோ வைரஸ் மிகவும் குறைவான கடுமையானவை. சீன குடிமக்கள் மற்றும் சீனாவில் உள்ள வெளிநாட்டினரின் ஆரோக்கியத்தில் சீன அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சீனாவில் பயணம் செய்வது பாதுகாப்பானது’ என்று தெரிவித்தார்.
The post கொரோனா முடிந்தது… மெட்டா நியூமோ வந்தது… சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மக்கள் கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் அனுமதி; உலக நாடுகள் அதிர்ச்சி: அவசர நிலை அறிவிக்கப்படுமா? appeared first on Dinakaran.