சென்னை : நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார். 2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட அணையினை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து அவ்வணையில் பணிபுரியும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் முதல் செயற் பொறியாளர் வரை ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- மற்றும் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று (03.01.2025), தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அரசால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்வுசெய்யப்பட்ட 2016-2017-ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம். பெருஞ்சாணி அணை, 2017-2018 ஆம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 2018-2019 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டம், வாணியாறு அணை, 2019 2020 ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம். பேச்சிப்பாறை அணை. 2020-2021 ஆம் ஆண்டிற்கு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மற்றும் 2021 2022 ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணை ஆகிய 6 அணைகளில் பணிபுரிந்த செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- வழங்கியும் தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப.. நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) திரு.S.மன்மதன், நீர்வளத்துறையின் மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் திருமதி M.ஜானகி, திரு.R.தயாளகுமார், திரு.S.முருகேசன் மற்றம் திரு.S.ரமேஷ், நீர்வளத்துறையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமைப் பொறியாளர் திரு.S.கோபாலகிருஷ்ணன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
The post சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!! appeared first on Dinakaran.