சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க 30 குழுக்கள் அமைத்து விதிமீறலில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் பெர்மிட்டை சஸ்பெண்ட் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
வெளியூர்களில் தொழில் மற்றும் வேலை செய்பவர்கள், பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்கள் என பல தரப்பினரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று சொந்த பந்தங்களோடு பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்துதல், குடும்பங்கள் சேர்ந்து வெளியே செல்லுதல் என ஊரே களை கட்டும். இந்த பொங்கல் பண்டிகை போகி முதல் காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி தமிழர்கள் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் ஜன. 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை. இதனால் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
அதன்படி பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல வசதியாக அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இருப்பினும் ஆம்னி பேருந்துகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்கவும் அந்த பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது, வரி நிலுவை, அதிக சுமை ஏற்றவது, பெர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பார்கள்.
இந்த குழு அடுத்த வாரம் முதல் செயல்பாட்டை தொடங்க உள்ளது. இக்குழுவினர் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிப்பது, அவற்றின் பெர்மிட்டை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. விதி மீறலில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறை பிடித்து பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பெர்மிட் சஸ்பெண்ட்: தமிழக அரசு உத்தரவு; 30 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு appeared first on Dinakaran.