சிட்னி: ஆஸ்திரேலியா- இந்தியா இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் 4 டெஸ்ட்கள் முடிந்துள்ள நிலையில், ஆஸி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் இன்று காலை சிட்னியில் தொடங்குகிறது. கோஹ்லி, ராகுல் என அனுபவ வீரர்கள் இருந்தும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பும்ரா, சிராஜ் என பந்து வீச்சாளர்களின் பங்களிப்பில் குறைவில்லை. ரன் குவிப்பதில் தடுமாறி வரும் இந்தியா இன்று மாற்றங்களுடன் களமிறங்கும். கேப்டன் ரோகித், முன்னாள் கேப்டன் கோஹ்லிக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கூடவே பும்ரா தலைமையில் மீண்டும் இந்தியா களமிறங்கும் என்ற என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதற்கு ஏற்ப நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோகித் பங்கேற்கவில்லை. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மட்டுமே செய்தியாளர்களை சந்தித்தார்.
கூடவே ‘ரோகித்துக்கு அணியில் இடம் உண்டு‘ என்றும் கூறியிருக்கிறார். ஆனால் நட்சத்திர வீரர்கள் அணியில் இடம் பெறும் வாய்ப்பு குறைவு என்பதே விளையாட்டு உலகின் பேச்சாக உள்ளது. தொடர் வெற்றி களிப்பில் இருக்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. காயம் காரணமாக தடுமாறும் டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஹசல்வுட் ஆகியோருக்கு ஓய்வு தரப்படலாம். ஐசிசி உலக டெஸ்ட் பைனலுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் வெற்றி அவசியம். குறிப்பாக பயிற்சியாளர் பதவியில் கம்பீர் தொடர இந்தியாவுக்கு வெற்றி கட்டாயம். வென்றால் தொடர் டிராவாகும். இல்லாவிட்டால் கம்பீரின் பயிற்சியாளர் பணிக்கு இது கடைசி டெஸ்ட்டாக இருக்கலாம்.
அணி விவரம்:
* ஆஸ்திரேலியா: பேட் கமமின்ஸ்(கேப்டன்), நாதன் லயன், ஸ்காட் பொலாண்ட், ஜை ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, சாம் கானஸ்டஸ், மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஜோஸ் இங்லீஸ்(விக்கெட் கீப்பர்கள்), சீன் அபோட், மிட்செல் மார்ஷ், பியூ வெப்ஸ்டர்.
* இந்தியா: ரோகித் சர்மா(கேப்டன்), விராத் கோஹ்லி, அபிமன்யூ ஈஸ்வரன், யாஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், தேவதூத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, வாஷங்டன் சுந்தர், நிதிஷ்குமார், தனுஷ் கோடியான், கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், துருவ் ஜூரல், ஜஸ்பிரத் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா.
* தொடருவாரா…
முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்ேபாது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கம்பீரின் பயிற்சியில் இந்தியா தொடர்ந்து தடுமாறிக் கொண்டு இருக்கிறது. வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இதுவரை நடந்த 9டெஸ்ட்களில் இந்தியா 3ல் மட்டுமே வென்றுள்ளது. அதில் 2 வங்க அணிக்கு எதிராக விளையாடியவை. அதனால் பாஜக முன்னாள் எம்பியான கம்பீர் பயிற்சியாளராக தொடர்வாரா என்பதை இந்த டெஸ்ட்டில் இந்தியாவின் வெற்றி, தோல்வி முடிவு செய்யலாம்.
* ரோகித்-கோஹ்லி
இந்த தொடரில் இதுவரை நடந்த 4 டெஸ்ட்களில் முதல் டெஸ்ட்டில் விளையாடத ரோகித் 5இன்னிங்ஸ்களில் முறையே 3, 6, 10, 3, 9ரன் எடுத்துள்ளார். அதேபோல் 4டெஸ்ட்களின் 7 இன்னிங்சில் கோஹ்லி முறையே 5, 100, 7, 11, 3, 36, 5ரன் சேர்த்திருக்கிறார். காத்திருக்கிறார்கள்: இளம், அதிரடி வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், சர்பராஸ் கான், தேவதூத் படிக்கல், அஷ்வினுக்கு பதிலாக அணியில் இணைந்த தனுஷ் கோடியன் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
The post இன்று 5வது ஆட்டம் ஆரம்பம் கம்பீருக்கு கடைசி டெஸ்ட்: ரோகித் ஓய்வு: பும்ரா கேப்டன் appeared first on Dinakaran.