×

பாரதியார் பல்கலை. நிர்வாக குளறுபடி 54 பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கையில் சிக்கல்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குளறுபடியால் 54 பி.எச்டி. மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 134 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் 54 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. தவிர, எம்.பில்., பி.எச்டி. படிப்புகளும் வழங்கப்படுகிறது. எம்.பில். முடித்தவர்கள் பி.எச்டி முழு நேர படிப்பை 3 வருடங்களும், பகுதி நேரம் பி.எச்டி-யை 4 வருடங்களும் செய்கின்றனர்.

இந்த மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு சிறப்பு நீட்டிப்பு அளிக்கப்படுகிறது. இந்த சிறப்பு நீட்டிப்பு பெற ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் எத்திக்ஸ் கமிட்டியை அணுக வேண்டும். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பாரதியார் பல்கலையில் எதிக்ஸ் கமிட்டி கூட்டம் நடந்துள்ளது. இதில் பி.எச்டி. மாணவர்கள் பலர் பங்கேற்று சிறப்பு நீட்டிப்புக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி அவர்களுக்கு 6 மாத நீட்டிப்பு வழங்கியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து 54 மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை முடித்து டிசம்பர் மாதம் ஆய்வறிக்கைகளை ஆராய்ச்சி மையத்தில் சமர்ப்பிக்க சென்றபோது, அதிகாரிகள் எத்திக்ஸ் கமிட்டி அளித்த சிறப்பு கால நீட்டிப்பு தொடர்பான ஆணை வரவில்லை என தெரிவித்தனர். இதனால், மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையால் இது போன்ற குளறுபடி நடப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், எத்திக்ஸ் கமிட்டி சிறப்பு கால நீட்டிப்பு கேட்டு 54 மாணவர்களின் தகவல்களை உயர்கல்வித்துறை செயலரிடம் அளித்ததாகவும், அவர் கால நீட்டிப்பு வழங்க முடியாது என தெரிவித்து அதனை ரிஜெக்ட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது ஆராய்ச்சி மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பதிவாளர் ரூபா குணசீலன் கூறுகையில், ‘‘இந்த பிரச்னை குறித்து இதுவரை மாணவர்களிடம் இருந்து எவ்வித புகார்களும் வரவில்லை. சிறப்பு காலநீட்டிப்பு தொடர்பான பிரச்னை இருந்தால் மாணவர்கள் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

The post பாரதியார் பல்கலை. நிர்வாக குளறுபடி 54 பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கையில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Bharathiar University ,Coimbatore ,Coimbatore Bharathiar University ,Erode ,Tiruppur ,Nilgiris ,
× RELATED பாரதியார் பல்கலை. சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி