×

ஊரப்பாக்கம் அருகே கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்பு ராடு சிக்கியதால் பரபரப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தப்பினர்: புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை பயணிகளுடன் சென்னை நோக்கி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. வண்டலூர் – ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே இந்த ரயில் வந்தபோது ரயிலின் கீழ்பகுதியில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சத்தம் வந்ததால், டிரைவர் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர், இதுபற்றி அருகில் இருந்த ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் சக்கரத்தில் இரும்பு ராடு சிக்கி இருந்ததால்தான் சத்தம் ஏற்பட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ரயிலில் சிக்கிய இரும்பு ராடு அகற்றப்பட்டது. இந்த ராடு தண்டவாளத்தில் எப்படி வந்தது, மர்ம நபர்கள் வைத்து சென்றார்களா, ரயிலை கவிழ்க்க யாராவது வைத்தனரா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, கொல்லம் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால், அதன் பின்னே சென்னை நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சில மணி நேரம் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாததால் ரயிலில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். தொடர்ந்து இது குறித்து ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஊரப்பாக்கம் பகுதியில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதும், அவ்வாறு நேற்று முன்தினம் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தண்டவாளத்தை இணைக்கும் இரும்பு ராடை அங்கு மறந்து வைத்து விட்டு சென்றதும், அதிகாலை அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த இரும்பு ராடு சிக்கியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே தண்டவாள பகுதி முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வேறு எங்காவது அதுபோன்ற இரும்பு பொருட்கள் மறதியாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். அதில் வேறு எங்கும் இரும்பு பொருட்கள் இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து ரயில் சேவை வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.

The post ஊரப்பாக்கம் அருகே கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்பு ராடு சிக்கியதால் பரபரப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தப்பினர்: புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kollam ,Irrapakkam ,Chennai ,Southern Districts ,Kollam Express ,Kurpakkam ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் காலதாமதம்