×

மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதா?: பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

* போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று கூறுங்கள்.
* மாணவி பாலியல் விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
* இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

சென்னை: விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறீர்களா என்று பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பாக சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோடத்தில் நேற்று போராட்டம் நடைபெற இருந்தது. ஏற்கனவே அதிமுக,, நாம் தமிழர் கட்சி, பாஜ, மாணவர் இயக்கங்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் நேற்று காலை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்தனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காமல் மறுத்துவிட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு மட்டும் வள்ளுவர்கோட்டம் பகுதியில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாமக போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி, போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட முடியாது. போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் கைவைத்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று கூறுங்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல. வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

The post மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதா?: பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : High Court ,PMK ,
× RELATED கட்டிட விதிமீறல்கள் செய்து...