முறைகேடு புகாரால் 2 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம்

தர்மபுரி: 2 அரசு பள்ளிகளில் பணியாற்றிய தலைமையாசிரியர்கள், திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கலைச்செல்வி என்பவர் தலைமையாசிரியையாக இருந்தார். இந்நிலையில், 100 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளி தகைசால் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக 13 ஆசிரியைகளை நியமித்ததில் முறைகேடு நடந்ததாக, தலைமையாசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்தது. மேலும் அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் பெற்றோர்களால் கூறப்பட்டது.

இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. மேலும் பள்ளியில் கடந்தாண்டை விட பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவு, திறனறி தேர்வு, நீட் பயிற்சி தேர்வு போன்ற போட்டி தேர்வுகளில் மாணவிகள் வெற்றி பெறாதது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் தலைமையாசிரியை கலைச்செல்வி, காமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த தலைமையாசிரியர் சுதா, அவ்வையார் அரசு பள்ளிக்கு தலைமையாசிரியையாக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

இதேபோல், தர்மபுரி டவுன் அதியமான் ஆண்கள் பள்ளியில் கடந்த 2 ஆண்டாக தலைமையாசிரியராக பணியாற்றி வந்த தங்கவேலு மீது, பொறுப்பேற்ற பின்னர் பொதுத்தேர்வில் தேர்ச்சி குறைவு, போட்டி தேர்வுகளில் மாணவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாதது, உயர் கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் கூறப்பட்டது. நேற்று முன்தினம், அதியமான் அரசு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேலு, வத்தல்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வத்தல்மலையில் பணியாற்றிய தலைமையாசிரியர் காமராஜ், தர்மபுரி டவுன் அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். ஒரே நாளில் இரு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முறைகேடு புகாரால் 2 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: