×

எருமேலி மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக சபரிமலை வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் திடீர் ரத்து: புத்தாண்டில் பக்தர்கள் குவிந்ததால் நடவடிக்கை

திருவனந்தபுரம்: புத்தாண்டு தினமான இன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் குவிந்தனர். இதனால் எருமேலி மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாஸ் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்நடை கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. நேற்று 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். புத்தாண்டு என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று வந்த பக்தர்கள் இன்றுதான் தரிசனம் செய்ய முடிந்தது என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது.

நேற்று, 14 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், அப்பம், அரவணை பிரசாதம் வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக எருமேலி (பெரிய பாதை) மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடியாக தரிசனம் செய்வதற்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டது. இந்த வழியாக வரும் பக்தர்களுக்கு உடனுக்குடன் தரிசனம் செய்ய முடிந்தது. தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு பாஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த பாதையில் பக்தர்கள் எண்ணிக்கை 5 மடங்கு வரை உயர்ந்தது.

இதனால் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக எருமேலி மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாஸ் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

The post எருமேலி மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக சபரிமலை வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் திடீர் ரத்து: புத்தாண்டில் பக்தர்கள் குவிந்ததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Buffalo ,Pullmede Forest ,Eve ,Thiruvananthapuram ,New Year's Day ,Ayyappa ,Pullmead Forest ,Sabarimalai Aiyappan Temple ,Maharagalaka Kala Pooja ,Pulmedu Wildway ,Dinakaran ,New Year ,
× RELATED சபரிமலையில் மண்டல காலத்தில் 32.5 லட்சம்...