×

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவி விவகாரம்; மீண்டும் சுப்ரீம் கோர்ட் வந்தால் அபராதம்: மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

டெல்லி: சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவி தொடர்பான விவகாரத்தில் கடந்த மாதம் 19ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தேவி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் மறுவாக்கு பதிவு நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த நடவடிக்கைக்கு எதிராக தேவி தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அவரையே வெற்றி பெற்றவராக அறிவித்தது.

எனினும் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கு என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக தேர்தல் வழக்காக தாக்கல் செய்து நிவாரணம் தேடி கொள்ளுமாறு பிரியதர்ஷினி தரப்பிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதன்படி அவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார். இருப்பினும் பிரியதர்ஷினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கோ அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரிக்கோ அதிகாரம் கிடையாது’ என்று கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் பிரியதர்ஷினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜராஜன், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் எங்களுக்கு தான் அதிகமாக உள்ளது. எனவே அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் எதிர்தரப்பினர் மறுவாக்கு நடந்த சமயத்தில் முறைகேட்டிலும் ஈடுபட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. கடந்த மாதம் 19ம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குள் செல்ல முடியாது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் வந்தால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்’ என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தேவியே தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று உறுதியாகியுள்ளது.

The post சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவி விவகாரம்; மீண்டும் சுப்ரீம் கோர்ட் வந்தால் அபராதம்: மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sankarapuram Govt ,Supreme Court ,Delhi ,Sankarapuram Authority ,Tamil Nadu ,Sankarapuram Orati ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...