தர்மபுரி, ஜன.1: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்தாண்டு சாலை விபத்தில் இறந்த 456 சடலம் உள்பட 1143 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 1000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தினசரி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 24 சடலங்கள் பாதுகாத்து வைக்க குளிர்சாதன வசதியுடன் உள்ளது. இயற்கைக்கு மாறாக இறந்தவர்களின் சடலங்கள் இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
மாதத்திற்கு சராசரி 62 முதல் 110 சடலங்கள் வரை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு (2024ம் ஆண்டு) 1143 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரியில் 103 சடலங்களும், பிப்ரவரியில் 84, மார்ச் மாதம் 99, ஏப்ரல்- 105, மே- 105, ஜூன்- 92, ஜூலை- 96, ஆகஸ்ட்- 91, செப்டம்பர்- 107, அக்டோபர்- 62, நவம்பர்- 110, டிசம்பர்- 89 என 1143 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் சடலம் 875ம், பெண் சடலம் 234ம், ஆண் குழந்தைகளின் சடலம் 16ம், பெண் குழந்தைகளின் 17 சடலங்கள் மற்றும் ஒரு திருநங்கையின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில், சாலை விபத்தில் இறந்ததாக 456 சடலங்களும், தூக்கிட்டு இறந்ததாக 157ம், விஷம் குடித்து இறந்ததாக 127ம், தண்ணீரில் மூழ்கி இறந்ததாக 59ம், கொலை செய்யப்பட்ட 35 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு 1143 பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மறுநாளே பரிசோதனை அறிக்கை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு 212 பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது. 129 பேருக்கு டிஎன்ஏ சான்றும் வழங்கப்பட்டுள்ளது. போதை பொருள் பயன்படுத்தியற்காக பரிசோதனை செய்து 22 பேருக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது. 7 இடங்களுக்கு நேரில் சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
The post கடந்தாண்டு 1143 சடலங்கள் பிரேத பரிசோதனை appeared first on Dinakaran.