×

தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு

கூடலூர்: கோவை வனப்பகுதியில் தாயை பிரிந்த பெண் குட்டி யானை, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோவை வனச்சரகத்தில் தாய் இறந்த நிலையில் தனியாக திரிந்த ஒரு மாத பெண் குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், குட்டி யானை கூட்டத்துடன் சேராததால் அதை முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொண்டு வந்து சேர்த்தனர்.

அதை பராமரிக்க தனியாக பாகன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கென அமைக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்டு குட்டி யானை தற்போது வனத்துறையின் சிறப்பு பராமரிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குளிர் காலம் துவங்கி உள்ள நிலையில் குட்டியை பாதுகாப்பதற்காக அறையின் உள்ளே சுற்றிலும் சாக்கு பைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு தரையிலும் சாக்கு பைகள் விரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பால், குளுக்கோஸ் உள்ளிட்ட சத்துணவுகளும் வழங்கப்படுகிறது. கால்நடை மருத்துவக்குழுவினர் மூலம் குட்டியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Coimbatore forest ,Coimbatore forest reserve… ,
× RELATED பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை சாலையில் உலவும் வன விலங்குகள்