×

நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது:விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை 2024ம் ஆண்டில் மூன்றாவது முறையாக நேற்று நிரம்பியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ம் தேதி முதல் முறையாக முழு கொள்ளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. மழை குறைந்த காரணத்தாலும், பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்ததன் காரணமாகவும் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, நேற்றிரவு மூன்றாவது முறையாக முழு கொள்ளளவினை எட்டியது. இதையடுத்து, 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக வரும் தண்ணீர் நீர்மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் திறக்கப்படுவதால் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கியது.

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியதால் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று வரை டெல்டா பாசனத்திற்கு 136 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நடப்பாண்டில் நேற்று வரை 7 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணை நிரம்பியதால் மேட்டூர் அணையின் உபரிநீர் நீரேற்ற திட்டத்திற்கு இன்று(புதன்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது:விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Mettur ,Delta ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு: 10,000 கனஅடியாக உயர்வு