சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியது. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, நள்ளிரவு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகளில் நண்பர்கள், உறவினர்களுடன் திரண்டதால் உற்சாகம் கரைபுரண்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. பழைய 2024ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, புத்தாண்டை பொதுமக்கள் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் வாண வேடிக்கைகளுடன் கேக், இனிப்புகள் வழங்கி விடிய விடிய கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளுடன் நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், பண்ணை வீடுகளில் மது விருந்துகளுடன், ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புத்தாண்டை வரவேற்க தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்கிய கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நேற்று இரவு 8 மணி முதலே குவிந்தனர். இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மற்றும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மேற்பார்வையில் மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் நேற்று முதல் இன்று அதிகாலை வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
காவல்துறையின் சிறப்பான முன்னெச்சரிக்கை பணி காரணமாக பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுட்டனர். கடற்கரை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடல் நீருக்கு அருகே செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை வரை மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை செய்தனர். அப்போது மது குடித்துவிட்டு பைக் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு ெசய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பாதுகாப்பு கருதி அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதையில் இருந்த நபர்களை போலீசார் சோதனை நடத்தும் பகுதியில் உள்ள தற்காலிக இடங்களில் தங்க வைத்து இன்று காலை போதை தெளிந்ததும் அனுப்பி வைத்தனர்.
சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேத்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் 19 ஆயிரம் போலீசார், 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணி மேற் கொள்ளப்பட்டது. அதேபோல் மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவில்லிக்கேணி, தி.நகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை என 12 காவல் மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
வழிபாடுகளுக்காக கோயில் மற்றும் தேவாலயங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கமிஷனர் அருண் உத்தரவுப்படி 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைத்து தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புத்தாண்டு உற்சாக மிகுதியில் வாலிபர்கள் பைக் ரேஸ்களில் ஈடுபடுவதை தடுக்கவும், கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச்சாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற இடங்களில் 30 சோதனை குழுக்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, பூங்காக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் போலீசார் ‘பருந்து’ செயலி மூலம் கண்காணித்தனர். மேலும் கடற்கரை பகுதியில் கடலில் யாரும் இறங்காதபடி மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் போலீசார் டிரோன் மூலம் கண்காணித்து, ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
மெரினா கடற்கரையில் கூடிய லட்சக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே காவல் உதவி மையம் கூடாரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
கூட்ட நெரிசலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெண் உதவி கமிஷனர் தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குழு கண்காணிப்பு பணி மேற்கொண்டது. இந்த சிறப்பு குழு, பெண்கள் மற்றும் இளம்பெண்களை புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், வேண்டும் என்றோ அல்லது திட்டமிட்டு கேக் மற்றும் இணிப்புகள் வழங்கி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட நபர்களை கண்டித்தும் எச்சரிக்கை விடுத்தனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலை போர் நினைவு சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை திட்டமிட்டபடி நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்கள் இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மூடப்பட்டன. நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா என்று போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது நள்ளிரவு 1 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்திய ஏற்பாட்டார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரை பகுதிகளில் மக்கள் தங்களது குடும்பத்துடன் மற்றும் வாலிபர்கள், இளம் பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடினர். நள்ளிரவு 12 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் ‘ஹாப்பி நியூ இயர்’ என விண்ணை முட்டும் வகையில் முழக்கிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது பொதுமக்கள் பலர் கேக் வெட்டி அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்தது. இதுபோன்று, நாடு முழுவதும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். உலக நாடுகளிலும் ஆங்கில புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
* முதலில் கொண்டாடிய நியூசிலாந்து
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகளில் முதலிலும் சில நாடுகளில் தாமதமாகவும் புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம் 2025ம் ஆண்டை முதலில் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. அங்கு, இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கே புத்தாண்டு பிறந்தது.
ஆயிரக்கணக்கானோர் ஸ்கை டவர் அருகே திரண்டனர். வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று நியூசிலாந்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அடுத்த 2 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் புத்தாண்டு பிறந்தது. அங்குள்ள துறைமுக பாலத்தில் நடந்த பாரம்பரிய வாணவேடிக்கையை கண்டு ரசிப்பதற்காக சுமார் 10லட்சம் பேர் வரை திரண்டனர்.
The post கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்களில் ஆர்ப்பரித்த மக்கள் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.