×

மனிதர்களை தாக்கும் ‘மெட்டா நியூமோ’வைரஸ் வேகமாக பரவுவதால் சீனாவில் மருத்துவ அவசரநிலை பிரகடனம்?

 

* மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிவதால் அச்சம்
* கொரோனாவில் இருந்து மீண்டு 5 ஆண்டுகளான நிலையில் பீதி

பீஜிங்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 5 ஆண்டுகளான நிலையில் சீனாவில் வேகமாக பரவும் ‘மெட்டா நியூமோ’ வைரசால் மக்கள் பீதியடைந்து மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீனா கூறுகிறது. உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பரவி ஐந்து ஆண்டுகளான நிலையில், தற்போது சீனாவில் மனிதர்களை தாக்கும் புதிய வகை வைரசான மெட்டா நியூமோ வைரஸ் (எச்.எம்.பி.வி) வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விளைவாக சீனாவின் முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் தகன மேடைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதால் மருத்துவ அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் எக்ஸ் பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘SARS-CoV-2 (COVID-19) தொற்றுநோய் போன்று புதிய வகை தொற்று நோய் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மக்கள் தங்களை பரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். தகன மேடைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவில் தற்ேபாது இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் வேகமாக பரவி வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வேகமாக பரவி வரும் எச்.எம்.பி.வி என்ற வைரஸ் தொற்றை மனித மெட்டா நியூமோவைரஸ் (எச். எம். பி. வி) என்று அழைக்கின்றனர்.

இந்நோய் பாதித்தவர்களுக்கு முதலில் ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் தோன்றும். பின்னர் அந்த ஜலதோஷ தொற்று காற்றில் பரவில் வைரஸ் தொற்றாக பரவும். பெரும்பாலும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. நிமோனியா, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களுக்கு எளிதில் தொற்றும். நாள்பட்ட நுரையீரல் நோய் பாதித்தவர்களுக்கும் உடனடி பாதிப்பை ஏற்படுத்தும். மனித மெட்டா நியூமோவைரஸ் என்ற நோய் கிருமியானது ஆர்எஸ்வி, தட்டம்மை மற்றும் புட்டாளம்மை ஆகியவற்றை உருவாக்கும் வைரஸ்களின் கூட்டு குழுவின் ஒரு பகுதியாகும். இந்நோயினால் மூச்சுத் திணறல் (டிஸ்பெனியா), மூக்கு சளி ஒழுகுதல், தொடர் இருமல் ஏற்படும். இந்த வைரஸ் தொற்றானது நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களைத் தொடுவதன் மூலமாகவோ பரவுகிறது.

உதாரணமாக, இருமல், தும்மல், கைகுலுக்குதல் அல்லது கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. மனிதர்களை தாக்கும் மெட்டா நியூமோவைரஸுக்கு தற்போதைக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவற்றை திறம்பட நிர்வகிக்க சில வழிகள் உள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நரம்புக்கு நேரடியாக வழங்கப்படும் திரவங்கள் (IV), ஆக்ஸிஜன் சிகிச்சை, கார்டிகோஸ்டீராய்டுகள், ஸ்டெராய்டுகள் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்க முடியும் என்கின்றனர். இதுகுறித்து சீனாவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம் ெவளியிட்ட அறிக்கையில், ‘எச்.எம்.பி.வி நோய் தொற்று பரவல் குறித்து முழுமையாக விசாரித்து வருகிறோம். தொற்று பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்ததில் நிமோனியா நோயின் அறிகுறிகள் இருந்தன.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த முறை கொரோனா வைரஸ் போன்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே மக்கள் பீதியடைய வேண்டியதில்லை. சீனாவில் டிசம்பர் 16 – 22ம் தேதிக்கு இடையில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்கால மாதங்களில் சீனாவில் இதுபோன்ற நோய் தொற்று பாதிப்புகள் அதிகமாவது வழக்கம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே 5 ஆண்டுக்கு முன் கொரோனா தொற்று சீனாவில் இருந்து பரவியது என்ற அச்சம் மக்களிடையே இருக்கும் நிலையில், தற்போது புதிய வகை வைரஸ் குறித்த அச்சம் பீதியடைய செய்துள்ளது.

இருமல், தும்மல், கைகுலுக்குதல் அல்லது கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. மனிதர்களை தாக்கும் மெட்டா நியூமோவைரஸுக்கு தற்போதைக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவற்றை திறம்பட நிர்வகிக்க சில வழிகள் உள்ளன என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

The post மனிதர்களை தாக்கும் ‘மெட்டா நியூமோ’வைரஸ் வேகமாக பரவுவதால் சீனாவில் மருத்துவ அவசரநிலை பிரகடனம்? appeared first on Dinakaran.

Tags : China ,Corona Beijing ,coronavirus pandemic ,Dinakaran ,
× RELATED சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு...