×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று அமாவாசையை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்தது. நாளை ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி, இன்று காலை கோயம்பேடு பூக்களின் விலை 6 மடங்கு உயர்ந்ததுள்ளது.

தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் கோயம்பேடு மலர் சந்தைக்கு தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு மலர் சந்தையில் அனைத்து வகை பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோ மல்லி 2,600 ரூபாயில் இருந்து 3000 க்கும் ஐஸ் மல்லி 2,500 லிருந்து 2,800 க்கும் முல்லை 1,100 லிருந்து 2,500 க்கும் ஜாதி மல்லி 900 லிருந்து 2,500 க்கும் கனகாம்பரம் 1000 லிருந்து 2000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், அரளி பூ 200 லிருந்து 500 க்கும் சாமந்தி 100 லிருந்து 160 க்கும் சம்பங்கி 190 லிருந்து 230 க்கும் பன்னீர் ரோஸ் 140 லிருந்து 200 க்கும் சாக்லேட் ரோஸ் 180 லிருந்து 260 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கும். அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்

மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மல்லி கிலோ ரூ.2,800, மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.1,000, பிச்சி கிலோ ரூ.1,300, முல்லைப் பூ கிலோ ரூ.1,200, செவ்வந்தி பூ கிலோ ரூ.160, சம்பங்கி பூ கிலோ ரூ.280, செண்டு மல்லிப் பூ கிலோ ரூ.100, கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,500, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை பூ ரூ.100, அரளி ரூ.450, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை பல மடங்கு உயர்ந்தாலும் பூக்களை வாங்குவதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொது மக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரண்டு நாட்கள் இதே விலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : English New Year ,Chennai ,Coimbed Flower Market ,Theni ,Dindigul ,Virudhunagar ,Ramanathapuram ,English New Year's Eve ,
× RELATED ஆங்கில புத்தாண்டு மட்டுமல்ல… இன்னும்...