×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டார்!

 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டு முதல் தெய்வத் திருஉருவப் படங்களுடன் கூடிய நாட்காட்டி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (27.12.2024) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை வெளியிட்டார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஏற்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை, புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் துறையின் சார்பில் தெய்வத் திருஉருவப் படங்களுடன் கூடிய நாட்காட்டி வெளியிடப்பட்டு வருகிறது. 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 1,200 பெரிய நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டு, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டன. சிறிய நாட்காட்டிகளை பொறுத்தளவில் 2023 ஆண்டு 30 ஆயிரம் எண்ணிக்கைகளும், 2024 ஆண்டு 25 ஆயிரம் எண்ணிக்கைகளும் தயார் செய்யப்பட்டு, துறை சார்பில் நடத்தப்படும் 104 ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டன.

அச்சிடப்பட்ட செலவினம் போக, விற்பனை வாயிலான கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ. 6 இலட்சத்தில் பெரிய நாட்காட்டிக்கான தயாரிப்பு செலவினம் போக ரூ. 3 இலட்சம் திருக்கோயில்களுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. அந்த வகையில் எந்த முயற்சி எடுத்தாலும் பக்தர்களுக்கு நன்மை செய்கின்ற அதே நேரத்தில் எந்த விதத்திலும் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்ற ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றபின், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து, திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற, பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களில் கல், அழுக்கு, அரக்கு நீக்கி, அவற்றை சரி பார்த்து மும்பையிலுள்ளன ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் வட்டித் தொகை ரூ. 6.31 கோடி கிடைத்து வருகிறது. இந்தத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த முற்பட்டபோது பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவதூறுகளை கற்பித்து இந்த திட்டத்தை முடக்க பார்த்தார்கள்.

அன்றைக்கு வசைபாடியவர்கள் கூட இன்றைக்கு வாழ்த்துகின்ற வகையில் செயல்படுத்தி வருகின்றோம். இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 631 கிலோ தங்கம் தான் வைப்பு நிதியில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 472 கிலோ 703 கிராம் முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு, 8 திருக்கோயில்களின் 776 கிலோ 272 கிராம் பலமாற்று பொன் இனங்கள் உருக்கிட மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு திருகோயில்களில் பயன்பாற்ற பலமாற்று பொன் இனங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை பொறுத்தளவில் கடந்த காலங்களில் இதுபோன்று அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்படவே இல்லை. அதிமுகவோடு திரை மறைவில் ஒட்டி உறவாடுகின்ற, இந்த குற்றச்சாட்டை கூறிய சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி கடந்த காலங்களில் எவ்வளவு திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்தனர் என்ற பட்டியலை வெளியிடட்டும்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் 38 மாவட்டங்களுக்கும் மாவட்டக் குழுக்களை நியமித்துள்ளோம். முதலமைச்சர் அறங்காவலர் நியமனத்தில் அரசியல் தலையிடக்கூடாது என்று கடுமையான உத்தரவை பிறப்பித்து இருந்தார். நீதிமன்ற வழக்குகள் நிலுவை மற்றும் குற்றப் பின்னணி உடையவர்கள், திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு பதிந்தவர்கள், திருக்கோயிலுடைய சொத்துக்களில் வாடகை நிலுவை இருப்பவர்களை நியமிக்க கூடாது என்ற சட்ட விதிமுறைகளை பின்பற்றி, தகுதி உடையவர்களை துறையில் சார்பில் ஒரு அறிக்கையை பெற்றும், உளவுத்துறையில் வாயிலாக ஒரு அறிக்கையை பெற்றும் நேர்மையான, திருக்கோயிலுக்கு பணியாற்றுகின்ற எண்ணமுடைய செல்வந்தர்களை, பொதுமக்களின் அன்பை பெற்றவர்களை, ஆன்மிகவாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அறங்காவலர் குழு நியமனத்திற்கு இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு முறைப்படியான அறிவிப்புகளை விளம்பரங்கள் செய்தும், அந்தந்த திருக்கோயில் விளம்பரப் பலகையிலும் வெளியிட்டுள்ளோம் இதுவரை 17 ஆயிரம் சிறிய கோயில்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 8,000க்கும் அதிகமான திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமித்து, இதைப் பற்றிய முழு தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த போது மேலும் பணிகளை விரைவுப்படுத்துங்கள் என அறிவுறுத்தியது.
திருச்செந்தூர் திருகோயிலில் அர்ச்சகர்கள் பணம் வாங்கி கொண்டு தரிசனம் செய்து தருவதாக ஒரு செய்தியாளர் குறிப்பிட்டார். முடிந்த அளவிற்கு அவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இப்படி கட்டுப்படுத்துகின்ற போது ஏதாவது ஒரு வகையில் நீதிமன்றங்களுக்கு சென்று அவர்களுக்கு சாதகமாக ஆணை பெற்று விடுகிறார்கள். இருந்தாலும் முழு முயற்சியோடு நீதிமன்றத்தினுடைய நெடிய படிக்கட்டுகள் ஏறினாலும் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு மிக விழிப்புணர்வோடு இது போன்ற பெரிய திருக்கோயில்களுக்கு ஆளுமையுடைய முழு நேரம் பணியாற்றக் கூடிய அலுவலரை நியமித்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த குற்றங்கள் நடைபெறாமல் இது போன்ற சூழல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு துறை முழு வேகத்தோடு செயல்படும்.

திருக்கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், திருவிழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. திருக்கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக தேவைப்படுகின்ற இடங்களில் நிச்சயமாக இந்து சமய அறநிலைத்துறை பொருத்தும். 1951 ல் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டதற்கு பிறகு, 1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய சட்டம் இயற்றப்பட்டது. அந்தத் சட்டத்தின் படி தான் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. சுமார் 65 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு சில நடைமுறைகளில், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல், எவையெல்லாம் உகந்ததோ அவற்றை ஜனநாயக ரீதியில் கருத்து கேட்டு மாறுதல் செய்தால் தான் சிறப்பாக இருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த செயலையும் இந்த திராவிட மாடல் அரசு செய்யாது. ஜனநாயக ரீதியாக கருத்துக்களைக் கேட்டு, முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆன்மிகவாதிகள், சமயப் பெரியோர்கள் துணையோடு, தேவைப்பட்டால் மட்டுமே மாற்றங்கள் கொண்டு வரப்படும். பழனி ரோப்காரைப் இரவில் அதிக நேரம் செயல்படுத்திட தயாராக உள்ளோம்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், ரோப்கார் இயந்திரங்களின் கொள்ளளவு, அவற்றின் தன்மையினை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகு நீண்ட நேரம் அனுமதிக்கப்படுகின்ற சூழல் இருந்தால் நிச்சயமாக ஆய்வுக்கு பின் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சில திருக்கோயில்கள் இரவு 12 மணிக்கும், சில திருக்கோயில்கள் விடியற்காலை 4 மணிக்கும் திறக்கும் வழக்கம் உள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளே கடைபிடிக்கப்படும். இந்த ஆட்சியானது ஆகம விதிகளை மீறாத ஆட்சி, தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களையும் திடீரென்று உடைத்து விடக்கூடாது என்பதில் முழு கவனமாக இருக்கின்றோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் அமையும். திருப்போரூர் முருகன் திருக்கோயில் உண்டியலில் போடப்பட்ட செல்போன் விவகாரத்தில் வரும் ஜனவரி 2 அல்லது 3 ஆம் தேதிக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச.இலட்சுமனன், திருமதி இரா.வான்மதி, திருமதி கி.ரேணுகாதேவி, உதவி ஆணையர்கள் பா.பாஸ்கரன், ஜெ.சசிக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டார்! appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,Minister ,B. K. ,Sekarbaba ,Hindu Religious Institute ,Deivat Thirurapava ,Minister of ,Hindu Religious Affairs ,P. K. ,Hindu Religious Foundation Department ,Sekharbhabu ,
× RELATED மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை முருகன்...