இந்த வார விசேஷங்கள்

சனி மகா பிரதோஷம்
28.12.2024 – சனி

இந்த நாள் சனிமகா பிரதோஷ நாள். அதுவும் சனிக்குரிய அனுஷ நட்சத்திரத்தில் வருகிறது. இந்த ஆண்டு ரிஷப குருவின் பார்வையில், விருச்சிகத்தில் அனுஷத்தில் சந்திரன் இருக்கும் சனிக்கிழமையில் வருவது மிகச் சிறப்பு. மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய்பிறை நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் ‘‘சனிப் பிரதோஷம்’’ என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.அத்தனை சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமை வரும் பிரதோஷம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி மற்றும் சனி திசை புத்தி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.சனி மகா பிரதோஷத்தன்று நந்தி தேவனுக்கு அறுகம்புல் அல்லது வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பு தரும். காரணம், திரயோதசி திதியில், சந்தியா காலத்தில் ஈசன் ஆடிய தாண்டவத்தின் பெயர் பிரளயத்தாண்டவம். இது நந்தி பகவானின் கொம்புகளுக்கு இடையே ஆடப்பட்டது என்பது நம்பிக்கை. எனவே இந்த பிரதோஷ நாளில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது பெரும் சிறப்பைத் தரும்.

தொண்டரடிப் பொடியாழ்வார் திருநட்சத்திரம்
29.12.2024 – ஞாயிறு

திருமாலை அறிய வேண்டுமானால் திருமாலை அறிய வேண்டும். திருமாலை என்று முதலில் கூறியது பரம்பொருளான ஸ்ரீமந். அடுத்து திருமாலை என்று கூறியது அந்த பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய திருமாலை என்று புகழப்படும் நூலை. சோழநாட்டில், தஞ்சை மாவட்டத்தில், திருமண்டங்குடி என்ற ஊரில் (கும்பகோணம் அருகில் உள்ளது) மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர். அழகான பாடல்கள் பாட வல்லவர். பாமாலையோடு பூமாலையும் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்துவரும் தொண்டினை காலம் காலமாகச் செய்து வந்தார்.பெருமாளுக்கு அவர் பாடிய திருப்பள்ளியெழுச்சி எனும் பக்திப் பிரபந்தம் அரிய பொருளனைத்தையும் பத்துப் பாடல்களில் விவரிக்கிறது. அரங்கனைத் தவிர வேறு யாரையும் பாடாத அந்த ஆழ்வார் அரங்கனிடத்திலேயே அடைக்கலமானார். அவர் அவதார தினம் இன்று எல்லா பெருமாள் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. அவருடைய அருமையான பாசுரங்களில் ஒன்றாவது இன்று பூஜையில் பாடி ஆழ்வாரின் அருளைப் பெறலாம்.

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே

பெரிய நம்பிகள் திருநட்சத்திரம்
29.12.2024 ஞாயிறு

ஆளவந்தார் சிஷ்யர். ஸ்ரீ ராமானுஜரின் குரு பெரிய நம்பி. மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில், புதன்கிழமை ஸ்ரீரங்கத்தில் அவதரித்தவர் பெரியநம்பி. ராமானுஜருக்கு வைணவ தீட்சை எனும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்த முக்கிய ஆசார்யர் இவர். ஆகையால்தான், ஆளவந்தாருடைய சீடர்களுக்குள் பெருமை பெற்றவராய், ‘‘பெரிய நம்பி’’ என்று அழைக்கப் பெற்றார். ஆளவந்தார் உத்தரவின் பேரில் இவரே, ஸ்ரீ ராமானுஜரைத் திருவரங்கத்துக்கு அழைத்து வர காஞ்சிபுரம் புறப்பட்டார். வரும் வழியில் மதுராந்தகம் ஏரி காத்த பெருமாள் கோயிலிலே ஸ்ரீராமனுஜரை சந்திக்க, அங்கு ‘‘ஸ்ரீ ராமானுஜ ஸமாஸ்ரயணம்’’ நடைபெற்றது. சிறந்த குண பூர்த்தி உடையவர். திருப்பாணாழ்வார் அருளியுள்ள ‘‘அமலனாதிபிரான்’’ என்னும் பிரபந்தத்திற்கு, ‘‘ஆபாத சூடமனுபூய ஹரிம் ஸயாநம்’’ என்று தொடங்கும் அற்புதமான வட மொழித் தனியன் இட்டவர் பெரிய நம்பிகள்.
ஒரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்க, அவருக்கு குருவும் வயதில் பெரியவருமான பெரிய நம்பிகள் கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாராம். சிறியவரின் காலில் பெரியவர் விழலாமா, அதுவும் அவருக்கு ஸமாஸ்ரயணம் செய்த ஆசாரியராயிற்றே நீர்? சிஷ்யன் காலில் விழலாமா என்று கேட்க, நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரின் தோற்றம், தன் ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தாரைப் போலவே இருந்ததால், இவர் ராமானுஜர் என்பதை மறந்து, ஆளவந் தாராகவே பாவித்து வணங்கினேன் என்று கூறினாராம்.

அனுமன் ஜெயந்தி
30.12.2024 – திங்கள்

மார்கழி அமாவாசை மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமார். வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் சாற்றி அனுமனை வழிபடுவது வழக்கம். அனுமன் ஜெயந்தி அன்று அவருக்கு விருப்பமான ராம நாமம் சொல்லுவது, அவரின் அருளை எளிதில் பெறுவதற்கு வழி செய்யும். அனுமனை வழிபடுவதால் அனுமனின் அருளுடன், ராமரின் அருளும் கிடைக்கும். இன்று அவரை குறித்த இந்த சிறிய ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
அசாத்ய சாதக ஸ்வாமின்
அசாத்ய தவ கிம் வத
ராம தூத கிருபா ஸிந்தோ
மத்கார்யம் சாதய ப்ரபோ
காரிய சித்திக்கான இந்த அனுமன் மந்திரத்தை தினமும் 108 முறை 40 நாட்களுக்கு ஜபிக்கவும். இன்று திங்கட் கிழமை வரும் சிறப்பான சோமவார அமாவாசை என்பதால் பிதுர் தர்ப்பணம் செய்வதோடு அரச மரம் வலம் வர வேண்டும்.

திருநெடுந்தாண்டகம் தொடக்கம்
30.12.2024 – திங்கள்

திருவரங்கத்திலும் மற்ற எல்லாப் பெருமாள் கோயில்களிலும் திருநெடுந்தாண்டகம் இன்று தொடக்கம். மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல் பத்து, இராப் பத்து உற்சவங்கள் பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். இதற்கு திரு அத்யயன உற்சவம் என்று பெயர். ஸ்ரீரங்கத்தில் இந்த உற்சவம் நடைபெறும் இருபத்தொரு நாட்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும். அதன் தொடக்கம்தான் திருநெடுந்தாண்டகம். (இன்று) திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வாரின் ஆறாவது பிரபந்தம். இதை வைணவர்கள் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் என்பார்கள். இந்தப் பிரபந்தத்தை வைத்துத்தான் பராசரபட்டர் வேதாந்தியான மாதவாசாரியாரை நஞ்ஜீயர் என்கின்ற ஆச்சாரியராக மாற்றினார். திருமங்கையாழ்வார் இந்தத் திருநெடுந்தாண்டகத்தை பெருமாள் முன் பாடி, அதற்குச் சன்மானமாகத்தான் திருவாய்மொழி உற்சவத்தை நடத்த பெருமாளிடம் அனுமதி பெற்றார் என்பது வரலாறு. இந்த உற்சவத்தின் ஒரு பகுதிதான் வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் 30.12.2024 திங்கள்கிழமை தொடங்குகிறது, அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை (31.12.2024) முதல், பகல் பத்து ஆரம்பமாகிறது. ஜனவரி மாதம் 9 ம் தேதி பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சிதருவார். அடுத்த நாள் (10.1.2025) அதிகாலை வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறக்கப்படும். ஜனவரி மாதம்17ஆம் தேதி கைத்தலச் சேவையும், 18ஆம் தேதி திருமங்கை மன்னனின் வேடுபறி உற்சவமும், ஜனவரி 19ஆம் தேதி தீர்த்தவாரியும் 20ம் தேதி ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷமும் நடைபெறும்.

சாக்கிய நாயனார் குருபூஜை
31.12.2024 – செவ்வாய்

63 நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார். குரு பூஜை மார்கழி பூராடம் நட்சத்திரம். காஞ்சிபுரம் அருகே திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர். ஒருநாள் வெட்ட வெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிபாடு ஏதுமின்றி கிடந்த சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. அந்த லிங்கத்தை நினைத்து சாக்கிய நாயனார் உள்ளம் உருகினார். அதை தூய நீரால் நீராட்டி, மலர்கள் சாத்தி பூஜிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த வெட்ட வெளியில் நீரும் இல்லை, மலர்களும் இல்லை. என்ன செய்வது? ஈசன் மீது கொண்ட அன்பு மிகுதியால், கீழே கிடந்த கல்லை எடுத்து, ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினார். தன்னுடைய பக்தன் அன்பினால் தன்மீது கல்லெறிந்தாலும் அதை மலராக ஏற்றுக் கொண்டான் இறைவன். “ஓ இது இறைவனுக்கு உகந்ததுதான்” என்று நினைத்துக் கொண்டு, பிறகு அதையே வழக்கமாக்கிக் கொண்டார் சாக்கிய நாயனார். இந்தப் பூஜை தினந்தோறும் நடந்தது. ஒருநாள் சாக்கிய நாயனார் அன்றாடம் தான் செய்து வருகின்ற அர்ச்சனையை மறந்து வந்து விட்டார். இன்று அர்ச்சனை செய்ய மறந்து விட்டோமே என்று பதறிய நாயனார் உடனடியாக சிவலிங்கத் திருமேனிக்கு அர்ச்சனை செய்ய ஓடினார். பக்தியோடு அருகிலிருந்த கற்களை சிவலிங்கத்தின் மீது வீச அவைகள் மலர்களாக மாறிக் கொட்டியது. இவருடைய அர்ச்சனையில் மகிழ்ந்த இறைவன் இவருக்கு காட்சி தந்தார். இதை சுந்தரர் “வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்” என்று பாடுகின்றார்.

திருவோண விரதம்
2.1.2025 – வியாழன்

குருவாரம் இன்று. இன்று சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அது மிக விசேஷமான பலன்களைத் தரும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். காரணம், குருவும் சந்திரனும் சேர்வது சுப யோகம் செய்யும். இந்த நாளில் பல திருமால் ஆலயங்களில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும். இந்தத் திருமஞ்சனத்தில் கலந்து கொள்ளலாம். வீட்டில் சாளக்கிராமம் இருந்தால் அவசியம் திருமஞ்சனம் செய்யலாம். இதன் மூலமாக மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவின் பேரருளைப் பெறலாம். சகல சௌபாக்கியங்களும் கிடைக்க கூடிய உத்தமமான விரதம் இந்த விரதம்.

29.12.2024 – ஞாயிற்றுக்கிழமை – மாத சிவராத்திரி.
30.12.2024 – திங்கட்கிழமை – சோம அமாவாசை.
31.12.2024 – செவ்வாய்க்கிழமை – பகல் பத்து உற்சவம் ஆரம்பம்.
3.1.2025 – வெள்ளிக்கிழமை – சுக்லபட்ச சதுர்த்தி.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: