சில திவ்ய தேசங்கள் சில ஆச்சரியங்கள்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வைகுந்த நாதர் எனும் கள்ளபிரான் பெருமாள் கோயில். இத்தல பெருமாள் பூமியில் புதையுண்டு போய் பசு ஒன்று தனது பாலை தானாகவே இவர் மீது சுரந்து வெளி வந்தவர் என்பதால் அன்று முதல் இந்த பெருமாள் பாலாபிஷேகம் காண்கிறார். தினமும் பக்தர்களும் தங்களது பிரச்சினைகள் தீர பால்தந்து பாலாபிஷேகம் செய்கின்றனர். 108 திவ்ய தேசங்களில் தினமும் பாலாபிஷேகம் காணும் ஒரே பெருமாள் இவர் மட்டுமே. திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு சிவன் கோயில்களில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி தன் பொற் கரங்களால் வணங்கி செல்வது போல ஐப்பசி மாதம் ஆறாம் நாளில் சூரிய ஒளி கோபுரம் வழியாக நேராக பெருமாள் மீது விழுந்து சூரியன் பெருமாளை வணங்கிச் செல்கிறார். இது வேறு எந்த திவ்ய தேசங்களிலும் நடக்காத ஒன்று.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோயில். இங்கே இவருக்கு ஆண்டில் 360 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே இப்படி நடக்கின்றது. எனவே இத்தலபெருமாளை வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.

திவ்ய தேசங்களில் ஒன்று சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், இங்கு மட்டுமே பெருமாள் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கும் காட்சியை காணலாம்.கர்பபக்கிரகத்தில் பிரதான மூர்த்தியாக வேங்கட கிருஷ்ணன், வலது புறத்தில் ஸ்ரீருக்மணி தாயார், இடது புறத்தில் கிருஷ்ணரின் தம்பி சாத்பகியும், ருக்மணி தாயார் வலது புறத்தில் கிருஷ்ணரின் அண்ணன் பலராமர் வடதிசை நோக்கியும். கர்ப்ப கிரகத்தின் வடக்கு பக்கத்தில் கிருஷ்ணரின் புதல்வன் ப்ரத்யும்னனும், தென் திசை நோக்கி பேரன் அநிருத்தனும் அருள்பாலிக்கிறார்கள்.

மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தலசயனப் பெருமாள் கோயில். திவ்ய தேசங்களில் 63வது தலம். இந்த கோயில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீ தேவி இல்லாமல் படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத படி எளிமையான கோலத்தில் தலசயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள காட்சி வேறு எங்கும் காண முடியாதது.

பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டுமே காட்சி தருவார் ஆனால் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மட்டும். பெருமாள் சார்ங்கம் எனும் வில்லுடன் காட்சி தருகிறார். இங்கே மூலவர், உற்சவர் இருவருமே வில் வைத்திருப்பது விசேஷம். இங்கு பூஜையின் போது மூலவருக்கு செய்யும் அத்தனை அலங்காரங்களும் உற்சவருக்கும் செய்யப்படுவது வேறெங்கும் இல்லாதது.பொதுவாக பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு நடக்கும். ஆனால் இங்கு சொர்க்க வாசல் திறப்பு கிடையாது.

சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் கோயிலில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரை தோன்றும் அதில் பிரம்ம அமர்ந்திருப்பார். ஆனால் திவ்ய தேசங்களில் ஒன்றான நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சயனக்கோலத்தில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரைப் பூ உருவாவதில்லை என்பது தனிச்சிறப்பு. 108 திவ்ய தேசங்களில் மிக நீளமான பெருமாள் இவர் தான்.

காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாள் மட்டுமே வலமிருந்து இடமாக மேற்கு நோக்கி சயனித்திருப்பார். பொதுவாக கோயில்களில் பெருமாள் இடமிருந்து வலமாக சயனிப்பதே வழக்கம். ஆனால் இங்கு பெருமாள் திருமழிசை ஆழ்வாருடன் புறப்பட்டு சென்று, மறுபடி வந்து படுத்ததால் இங்கு மட்டும் வலமிருந்து இடமாக மேற்கு நோக்கி சயனித்திருப்பார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் ரெங்கநாதருக்கு அமாவாசை, ஏகாதசி மற்றும் மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரில் அபிஷேகம் நடக்கின்றது. இது போன்று வேறு எந்த திவ்ய தேசங்களிலும் செய்வதில்லை. 12 ஆயிரம் சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது தான் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி சிலை. இது உடல் முழுவதும் தங்கத் தகடுகளால் பொதியப்பட்டிருக்கிறது. திவ்ய தேசங்களில் பெருமாளுக்கு ராணுவ மரியாதை செய்யப்படும் ஒரே தலம் இது மார்கழி மாத பள்ளி வேட்டை வைபவத்தில் இது நடக்கும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஒரு வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 365 கலைநயமிக்க தூண்கள் அமைந்திருக்கின்றன.

இந்தத் தூண்களில்தான் பாவை விளக்குகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. துல்லியமாகக் கணக்குப் பார்ப்பவர்கள் ஒரு வருடத்துக்கு 365 1/4 நாட்களாயிற்றே என்று கேட்பார்களானால், அதற்கும் பதில் இருக்கிறது. இந்த 1/4 தூண், மூலவர் கருவறைக்குள் அவரை நாம் தரிசிக்கப் போவதற்கு முன்னால் காணப்படுகிறது. கால்தூண் என்றால் உயரத்தில் அல்ல; பருமனில் உள்ளது.

பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்கள் இருப்பதில்லை. ஆனால் திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நவக்கிரகங்கள் இருப்பது தனிச்சிறப்பு. இங்கு மட்டுமே தங்க சடாரி உள்ளது. அதைக் கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்கள்.

நாகப்பட்டினம் நன்னிலம் சாலை வழி திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கே பெரிய பிராட் டியார், பூதேவி, கிரீடம் தரித்த ஆண்டாள் நாச்சியார், பத்மாவதி தாயார் என நான்கு தாயார்களுடன் நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

சுவாமி மலையிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆதனூர் இங்கு ஆண்டளக்கும் அய்யன் என்ற பெயரில் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த பெருமாளின் தலையின் கீழ் நெல் அளக்கும் மரக் காலும், இடது கையில் ஓலை எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். திவ்ய தேசங்களில் இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயிலில் ஆதிசேஷன் மடியில் பால பெருமாளாக குழந்தை வடிவில் கிடந்த கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். பெருமாளின் திவ்ய தேசங்களில் இவ்வளவு சிறிய பெருமாளை கிடந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.இத்தலத்தில் தான் ஆதிசேஷன் பிரம்மாண்டமான வடிவில் தனிக் கோயில் கொண்டு விளங்குகிறார்.

சுவாமிமலை அருகிலுள்ள திருப்புள்ளம் பூதங்குடி வல்வில் ராமர் பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 10வது திவ்ய தேசம். பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார். ஆனால் இக்கோவிலில் ராமர் சயனக்கோலத்தில் காட்சி தருகிறார். புதனுக்குரிய பரிகார தலம். இங்கு, பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது வழக்கத்தில் உள்ளது. ராமர், ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த தலமாதலால் இத்தலம் திருப்புள்ள பூதங்குடி ஆனது.

108 திவ்ய தேசங்களில் வித்தியாசமான ஆதி வராகப் பெருமாள் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூரில் காமாட்சி அம்மன் கோயில் முன்பு ஒரு மூலையில் பெருமாள் மிகச் சிறிய வடிவில் காட்சி தருகிறார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலியில் இருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ள மூழிக்குளத்தில் லட்சுமணருக்கு கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ராமாயணத்தில் ‘‘கண்டேன் சீதையை’’ என ராமருக்கு ஆறுதல் தந்த தகவலை அனுமன் முதன்முதலாக தெரிவித்த இடம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லட்சுமணப் பெருமாள் குழந்தை வரம் அருள்கிறார்.

108 திவ்ய தேசங்களில் விண்ணகரம் என்று சிறப்பிக்கப்படும் வைணவ தலங்கள் ஆறு. அவற்றில் ஒன்றுதான் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயில். இந்த கோயிலில் நைவேத்தியங்கள் உப்பில்லாமலே தயாரிக்கப்படுகிறது. அத்துடன் உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் தங்க குடம் கொண்டே திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அனுமனுக்கு தங்கவால், வைர கிரீடம் அணிவிக்கப்படுகிறது.

108 வைணவ திவ்ய தேச தலங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாலி அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோயில் இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து 5 கிமீ தொலைவில் இத்தலங்கள் அமைந்துள்ளன.108 திவ்யதேசங்களில் இங்கு மட்டும் தான் திருமங்கையாழ்வாருக்கு தனி மூலஸ்தானத்தில் திருமஞ்சன திருமேனியும், உற்சவ மூர்த்தியும் இருக்கிறது. திருஞானசம்பந்தருக்கும் இவருக்கும் நடந்த விவாதத்தின் நினைவாக அவர் பரிசாக கொடுத்த வேலை கையில் பிடித்த நிலையில் திருமங்கை இருக்கிறார்.

கோவீ. ராஜேந்திரன்

The post சில திவ்ய தேசங்கள் சில ஆச்சரியங்கள்…! appeared first on Dinakaran.

Related Stories: