கங்கை கொண்ட சோழபுரம் அல்லது கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயில் தென்னிந்தியாவில் உள்ள சோழர் காலத்து சிற்பங்களின் களஞ்சியமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழ வம்சத்தின் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம் இருந்ததால், இந்தக் கோயில் அதன் பெயரைப் பெற்றது. இது ஐராவதேஸ்வரர் கோயில் மற்றும் பிரகதீஸ்வரர் கோயிலுடன் ‘சோழர் கோயில்களின்’ பயணத்தின் ஒரு பகுதியாகும். இக்கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். கோயிலின் பிரதான கோபுரம் 55 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோயிலின் கட்டிடம் கம்பீரமாகவும் அதில் வளமான கலை மற்றும் சிற்பங்களால் வளாகத்தை முற்றிலும் பிரமாண்டமாக அலங்கரிக்கின்றன. இந்த அற்புதமான கோயில் உயரமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயரமும் 98 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அற்புதமான முற்றம் இக்கோயில் தலத்தில் அமைந்துள்ளது.
பெரும்பாலான சிவன் கோயில்களைப் போலவே, இங்குள்ள சிவலிங்கம் 13 அடி உயரம் கொண்டது. கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.
கோவில் மற்றும் நகரத்தின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அந்த இடத்திற்கு அதன் பெயர் வந்த விதம். சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திரன் தனது படையை இந்தியாவின் வட பகுதிகளை நோக்கி புனித நதியான கங்கையிலிருந்து தண்ணீர் எடுக்க அனுப்பினார். வழியில் பல எதிரிப் படைகளை முறியடித்து வெற்றியுடன் வீடு வந்து சேர்ந்தனர் மன்னரின் படையினர். இதனால் கங்கைகொண்ட சோழன் அல்லது கங்கையை வென்றவன் என்ற புனைப்பெயர் பெற்றார். அவர் ஒரு புதிய தலைநகரை நிறுவிய போது, அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரிட்டார். அந்த நகரத்தில் இக்கோயில் கட்டப்பட்ட போது அதே பெயரைப் பெற்றது.
கோயில் கோபுரத்தின் சிறப்பம்சம்
கோவிலின் நுழைவு வாசலாக, கிழக்குப் பகுதியில் 80 அடி உயரம் கொண்ட கம்பீரமான ராஜகோபுரம் வீற்றிருந்தது. ஆனால் இந்த கோபுரம் அழிந்து போனது. அங்கு இந்த ராஜகோபுரம் வீற்றிருந்ததற்கு அடையாளமாக கோபுரத்தின் நிலைக்கால்களான இரண்டு கல் தூண்கள் மட்டும் தற்போது உள்ளது. இந்தக் கோபுரத்தை அடுத்து, சற்று தூரத்தில், மூன்று அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது ராஜகோபுரத்தை காணலாம்.
இதன் மேல் பகுதி அழிந்த நிலையில் இருந்தாலும், கோபுரம் 24.5 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும் கொண்ட அடித்தளம் மட்டும் இப்போது காட்சி அளிக்கிறது. இரண்டாவது ராஜகோபுரத்தை அடுத்து, கொடிமரம். அதன் அருகே, பலி பீடம். அதனைத் தாண்டியதும், 6 மீட்டர் உயரம், 5.5 மீட்டர் அகலத்தில் அமைந்த பிரமாண்டமான நந்தி. கருங்கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டு, வழுவழுப்பான தோற்றத்திற்காக, மேல்பகுதியில் சுதைப்பூச்சு பூசப்பட்டு நந்தி, கம்பீரமாக அமர்ந்திருப்பதை காணலாம்.
நந்தியை அடுத்து, 185 மீட்டர் நீளம், 110 மீட்டர் அகலம் கொண்ட செவ்வகப் பகுதியில், கோவில் கட்டுமானத்தின் முழு அமைப்பு. இது தரையில் இருந்து சற்று உயரத்தில் இருக்கிறது. இதன் முதல் பகுதியில், 14 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலமான முகமண்டபம். தரையில் இருந்து கோவிலின் உயர் மட்டத்திற்கு ஏறி வருவதற்காக, முகமண்டபத்தின் வடபுறமும், தென்புறமும் அழகிய படிக்கட்டுகள். முகமண்டபத்தை அடுத்து, 50 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம் என்ற அளவில் அமைந்த மகாமண்டபம். இடது மற்றும் வலதுபுறங்களில் மேடை அமைப்பைக் கொண்ட மகாமண்டபத்தில் அழகான 153 தூண்கள். மகாமண்டபத்திற்கும், கருவறைக்கும் இடையே இடைநாழி என்ற அர்த்தமண்டபம். இங்கு, விமானத்தைத் தாங்கி நிற்கும் வகையில் ஆங்கில எழுத்தான ‘T’ வடிவில் 8 தூண்கள்.
கருவறையில் உள்ள லிங்கத்திற்கு எதிரே காணப்படும் அர்த்தமண்டபச் சுவரில், சண்டீசப்பதம், அர்ச்சுனனும், ஈசனும் மோதிக்கொள்ளும் காட்சி, மார்க்கண்டேயன் வரலாறு, மீனாட்சி திருக்கல்யாணம், விஷ்ணு அனுக்கிரக மூர்த்தி, கயிலை மலையை ராவணன் தூக்க முயற்சிக்கும் தோற்றம் ஆகியவற்றின் கண்கவர் சிற்பங்களை காணலாம். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் இருந்து நேரடியாகக் கருவறைக்கு வரும் வகையில், அர்த்தமண்டபத்தின் வடபுறமும், தென்புறமும் படிக்கட்டுகள். அங்கே காவல் காக்கும் பிரமாண்ட துவார பாலகர்கள் உள்ளனர். தென்புறப் படிக்கட்டு அருகே, கைகளில் தாமரை மலர் ஏந்திய கஜலட்சுமியின் அழகிய சிற்பம். வடபுறப் படிக்கட்டு அருகே, சண்டீசர் வரலாற்றை விளக்கும் சிற்பத் தொகுதி மற்றும் கல்விக் கடவுளான சரஸ்வதியின் சிற்பம்.
8.5 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட சதுரமான கருவறையின் நடுவில், 60 அடி சுற்றளவுடன் ஆவுடை அமைப்பு. அந்த ஆவுடையில் நிலை நிறுத்தப்பட்ட 16½ அடி சுற்றளவும், 13 அடி 4 அங்குலம் உயரமும் கொண்ட, பெருவுடையார் பிரகதீஸ்வரரின் மாபெரும் லிங்கம் வீற்றிருப்பதை பார்க்க முடியும். கருவறை, அடுத்தடுத்து இரட்டைச் சுவர்கள். முதலாவது சுவருக்கும், இரண்டாவது சுவருக்கும் இடையே 10 அடி அகல இடைவெளி, சாந்தாரம் எனப்படுகிறது. இதன் வழியே, கருவறையைச் சுற்றி வரமுடியும். இந்த இரட்டைச் சுவர்கள் மீதுதான் விமானம் நிற்கிறது. விமானத்தின் நான்கு பக்கச் சுவர்களில் இருந்து உச்சிப்பகுதி வரை அழகிய சிற்பங்களை பார்க்க முடியும்.
விமானத்தின் மேல்கூரை போல அமைந்திருக்கிறது, 34 அடி குறுக்களவு கொண்ட வட்ட வடிவக் கல். கீழே இருந்து மேலே வரும் சுவர்களின் இறுதிப் பகுதி, இந்தக் கல்லுடன் இணைந்து, தாமரை மலர் போன்ற தோற்றத்தைத் தருகிறது. வட்ட வடிவக் கல்லின் மீது, பல துண்டுக் கற்களால் உருவாக்கப்பட்ட கிரீடம். கிரீடத்தின் நான்கு திசைகளிலும், திசைக்கு ஒன்றாக நான்கு நந்திகள்.
கிரீடத்தின் உச்சியில் 15 அடி உயர அழகிய கலசம். லிங்கம் போன்ற தோற்றத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக, கீழ்ப்பகுதியில் சதுரமாகவும், நடுவே எண் கோண வடிவிலும், மேல்பகுதியில் உருளை வடிவிலும் விமானம் கட்டப்பட்டுள்ளது. வெளியே இருந்து பார்க்கும்போது, 9 அடுக்குகளைக் கொண்டதாகக் காட்சி அளிக்கும் விமானம், உள்புறம் 2 அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் அதிசயம். மொட்டைக் கோபுரமாக நிற்கும் 2-வது ராஜகோபுரத்தை இணைக்கும் வகையில், கோவில் கட்டுமானத்தைச் சுற்றி, 4 அடி அகலத்தில் மதில் சுவர். இந்தச் சுவரையொட்டி, கோவிலின் நான்கு புறங்களிலும், இரட்டை அடுக்குகளைக் கொண்ட திருச்சுற்று மாளிகை.
அந்த மாளிகையில் 8 திசைகளுக்கு ஏற்ற மூர்த்திகளுடன் 32 பரிவார ஆலயங்கள் இருந்தன. தற்போது அனைத்து பரிவார ஆலயங்கள், திருச்சுற்று மாளிகையின் பெரும்பகுதியும் அழிந்த நிலையில் உள்ளன. திருச்சுற்று மாளிகை இருந்ததற்கு அடையாளமாக, அதன் ஒரு சிறிய பகுதி மட்டும் கோவிலின் வடபகுதியில் காட்சி அளிக்கிறது. வெளிப்பிரகாரத்தில், தென்புறம் இரண்டு சிறிய கோவில்கள். முதலாவது சோமாஸ்கந்தருக்கு உரியது. இரண்டாவது, தென்கயிலாயம். இவற்றில் தென்கயிலாயம் மட்டுமே இப்போது உள்ளது.
வெளிப்பிரகாரத்தின் வடபகுதியில், வடகயிலாயம், அம்மன் ஆலயம். மகாமண்டபத்தையொட்டி, வடதிசையில் 11.2 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட சண்டீசுவரர் ஆலயம். அதே வடபகுதியில், கொற்றவைக்கு உரிய கோவிலாக மகிஷா சுரமர்த்தினி ஆலயம். கோவில் வளாகத்தின் முன்பகுதி வலது ஓரம், 8 மீட்டர் சுற்றளவுடன் கிணறு. அந்தக் கிணற்றில் இருந்து 8 மீட்டர் தொலைவில், படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட சிம்மக் கிணறு. கோவிலுக்குத் தேவையான தண்ணீரை, படிக்கட்டுகள் வழியாகச் சென்று எடுத்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிணறு, சிம்மக் கிணறு ஆகிய இரண்டுக்கும் இடையே 8 மீட்டர் நீள சுரங்கப் பாதையை காணலாம். கோவிலைச் சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகழிக்குத் தேவையான தண்ணீர், சோழகங்கம் ஏரியில் இருந்து வரும் வகையில், கோவிலுக்கு வெளியே தென்மேற்கில் ஒரு கால்வாய் அமைந்துள்ளது, கோவிலின் மூன்று பக்கச் சுவர்களிலும், உலகமே வியக்கும் வகையிலான அதி அற்புதச் சிற்பங்கள், 19 கோஷ்டங்களில் காட்சி அளிக்கின்றன. கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலின் சுற்றுப்புறங்களில் மேலும் சில சிறிய கோவில்களும் கட்டப்பட்டன. திசைக்கு ஒன்றாக நான்கு புறமும், நான்கு காளி கோவில்கள் எழுப்பப்பட்டன. தலைநகரைக் காவல் காக்கும் வகையில் இவை உள்ளன.
கோவில் வளாகத்திற்கு வெளியே, தென்மேற்கே கனக விநாயகர் அல்லது கணக்கு விநாயகர் என்ற சிறிய கோவில் கட்டப்பட்டது. மன்னர் ராஜேந்திரன், கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது, கோவில் கட்டுமானச் செலவு விவரங்கள் தொடர்பான ஐயப்பாட்டை இந்த விநாயகர் தீர்த்து வைத்தார் என்றும் அதன் காரணமாக அவர் கணக்கு விநாயகர் என்ற பெயர் பெற்றிருப்பதாக புராணத்தில் கூறப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவில், ஏதோ ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், சாதாரணமாக உருவாக்கப்பட்டதல்ல. அந்தக் கோவில், தற்போதைய பொறியாளர்களே வியக்கும் வண்ணம், அரிய பல தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இருக்கிறது. மேலோட்டமாக கோவிலைப் பார்க்கும் போது புலப்படாத அந்த ஆச்சரிய தொழில்நுட்பங்களும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கட்டடக்கலை நிபுணர்களின் வியத்தகு ஆற்றலும், கோவில் கட்டுமானத்திற்குள் அடங்கிக் கிடக்கின்றன.
திலகவதி
The post ராஜகோபுர தரிசனம்! appeared first on Dinakaran.