?நாட்டில் வறுமை இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. இப்படி பல பிரச்னைகள் இருக்கிறதே இதற்கெல்லாம் ஆன்மிகம் தீர்வு சொல்லுமா?
– மோகன், விழுப்புரம்.
ஆன்மிகம்தான் தீர்வு சொல்லும். ஆன்மிகம் என்பது இறந்த பிறகு வாழும் வாழ்க்கையைப் பற்றி என்றே பலரும் கருதி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது வாழும் போதே ஒழுக்கமான, அன்பான, பிறருக்கு உபயோகமான வாழ்க்கையைச் சொல்லித் தருவது என்பதை மறந்து விடுகின்றார்கள். விவேகானந்தர் இது குறித்து மிக அருமையாகச் சொல்லுவார். இரத்தம் புஷ்டியாகவும் தூய்மையாகவும் இருக்குமானால் நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது. நமது உயிர் மூச்சு ஆன்மிகம். அது தெளிவாக, உறுதியாக, தூய்மையாக உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்கும். அரசியல் சமுதாயம் மற்ற பொருளாதார குறைபாடுகள் எல்லாம் சீராக்கப்பட்டு விடும். ஏன் நாட்டின் வறுமை கூட தீர்க்கப்பட்டுவிடும் என்றார். விவேகானந்தரை நாம் படிப்பதில்லை. படித்தாலும் அந்த விஷயங்களைப் பின்பற்றுவதில்லை.
?ஒரு விரதம் மேற்கொண்டால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், பாதியில் நிறுத்தக்கூடாது என்கிறார்களே, பாதியில் நிறுத்தினால் பாதகம் விளையுமா?
– மு. மதிவாணன், அரூர்.
விளையாது. அதே நேரத்தில் பலன் கிடைக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் நன்மைகளை பாதியில் நிறுத்துவதால் அடையமுடியாது அல்லவா… முதலில் விரதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வயிற்றுக்குச் சாப்பிடாமல் இருப்பதன் பெயர் விரதம் அல்ல. விரதம் என்றால் மன உறுதி அல்லது கட்டுப்பாடு என்று பொருள். இந்தக் கட்டுப்பாட்டினை மேற்கொள்ளும்போது அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். பாதியில் விடும்போது இத்தனை நாள் விரதத்தினை கடைப்பிடித்ததற்கான பலன் கிடைக்காது போகும்.
அருள்ஜோதி
The post ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர செல்வாக்கும் மதிப்பும் கூடிக் கொண்டே போகிறது என்பதால் செல்வம் சேர்ப்பது வாழ்வின் பிரதான நோக்கமா? appeared first on Dinakaran.