வீர மாருதி கம்பீர மாருதி

கணக்கில்லாத அனுமன் ஆலயங்கள்

நாட்டில் ஏராளமான சிவாலயங்கள் உள்ளன. திருமாலுக்கு வைணவ ஆலயங்கள் உள்ளன. அம்மனுக்கு பிரதானமான அம்மன் ஆலயங்கள் உள்ளன. முருகனுக்கு சிறப்பான ஆலயங்கள் உள்ளன. ஆனால், ஆலயங்கள் எண்ணிக்கையில் அதிகமான எண்ணிக்கை இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே இருக்கின்றன. ஒன்று விநாயகர். அவர் மிக எளிதாக எல்லா ஊர்களிலும் இருப்பார். எல்லா தெருக்களின் முனையிலும் இருப்பார். இன்னும் சொல்லப் போனால் அவரவர்கள் வீட்டு சுற்றுச் சுவரில்கூட ஒரு சின்ன விநாயகர் இருப்பார். அவருக்கு முறையான வழிபாடுகள் நடைபெறும். அதற்கு அடுத்து மிக அதிகமான கோயில்கள் இருப்பது அனுமனுக்குத்தான். அனுமன் ராமபக்தன். ராமருக்கு இருக்கும் ஆலயங்களைவிட, ராம பக்தனாகிய அனுமனுக்கு ஆலயங்கள் மிக அதிகம். பக்தியில் சிறந்த தொண்டனுக்கு எப்பேர்பட்ட சிறப்பை நம்முடைய சமயம் தந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஞானத்தில் சிறந்த அனுமன்

அனுமனின் திருநட்சத்திரம் திருமூலம். பொதுவாகவே மூலம் ஞான நட்சத்திரம் என்பார்கள். காரணம் கலைவாணி சரஸ்வதி தேவியின் நட்சத்திரம் மூலம். ஆச்சாரியாரான சுவாமி மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரம் மூலம். சைவத்தில் திருமூலரின் நட்சத்திரம் மூலம். இப்படி ஞானம் நிறைந்தவர்கள் அவதார நட்சத்திரமாக அமைந்திருப்பது மூலம். எனவேதான் மூல நட்சத்திரத்தில் அவதரித்த அனுமன் ஞானத்தில் சிறந்தவராக, விளங்கினார். ராமனே தம்பியிடம், ‘‘இலக்குவா, இவன் சகல வேதங்களையும் கற்ற மிகப் பெரிய பண்டிதன். இவன் பேசுவதைப் பார்த்தால் இவன் கல்லாத கலைகளே உலகத்தில் இல்லை போல் தெரிகிறதே! யார் கொல் இச்சொல்லின் செல்வன்?’’ என்று கேட்கும் படி அவருடைய ஞானம் சிறந்து விளங்கியது அதுவும் மார்கழி மாதம் என்பதால் குருவின் ராசியில் (தனுசு), ஞானத்தைக் கொடுக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் (மூலம்) அவருடைய அவதாரம் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சிறப்பு.

அனுமான் பெயர்க் காரணம்

சமஸ்கிருதத்தில் ‘‘ஹனு’’ என்பதற்கும் ‘‘தாடையும்’’, ‘‘மன்’’ என்பதற்குப் ‘‘பெரிதானது’’ என்பதால், ‘‘ஹனுமன்’’ என்பதற்குப் பெரிய தாடையை உடையவன் என்று பொருள். அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர். இதை கம்பன் அனுமன் வாக்காகவே சொல்கிறான். (காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன். நாமமும் அனுமன் என்பேன்) என்ற பாடல் வரிகளால் அறியலாம். தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் போது தேவாம்சம் கொண்ட பாயசம் வந்தது. தெய்வீக கட்டளை மூலம் பருந்து ஒன்று அந்தப் பாயசத்தின் ஒரு பகுதியை, வெகுகாலம் குழந்தையில்லா அஞ்சனாதேவி தவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த காடுகளின் மீது பறக்கும் போது அதைத் தவறவிட்டது. வாயு பகவான், விழுந்த தெய்வீக பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் வழங்கினார், அவர் அதை உட்கொண்டதன் விளைவாக அனுமன் அவளுக்குப் பிறந்தான் எனவும் கூறுகிறது.

ஹம்பியில் அனுமனின் அவதாரத்தலம்

அனுமனின் அவதாரத்தலம் திருமலைதான் என்று சொன்னாலும், வேறு சில ஆய்வாளர்கள் ஹம்பிதான் என்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில். (யந்த்ரோ தரகா அனுமன் கோயில்). மத்வ துறவியான வியாச ராஜ தீர்த்தரால் பாடப் பெற்ற தலமாகும். துங்கபத்ரா நதிக் கரையில் அமைந்துள்ள இயற்கை வனப்புடன் கூடிய மலைப் பகுதியில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல மலைமீது ஒரு சமயத்தில் இருவர் மட்டுமே நடக்கக் கூடிய அளவில் குறுகலான படிகள் உள்ளன. 550 படிகளைக் கடந்து மேலே சென்றால் கோயிலை அடையலாம். ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்பதால் மலை உச்சியிலும் செல்லும் வழியிலும் ஏராளமான வானரங்களைப் பார்க்கலாம். வெள்ளையடிக்கப்பட்ட வெண்மை நிறச் சுவர் கொண்ட சிறிய கோயில் இது. தூரத்திலிருந்தே இந்தக் கோயிலின் மீதுள்ள கூம்பு வடிவுள்ள மாடத்தில் பறக்கும் காவிக் கொடியைக் காணலாம்.

தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்வில் அனுமன்

தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்வில், அனுமன் தொடர்பான ஒரு அழகான கதை உண்டு. தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீராமரின் சிறந்த பக்தர். 24000 பாடல்களுக்கு மேல் இயற்றியவர். இப்போது 700 பாடல்கள்தான் கிடைத்திருக்கின்றன. அவர் இயற்றிய பெரும்பாலான கிருதிகள் ராமரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஏறக்குறைய ஒவ்வொரு பாடலிலும் ராமனிடம் தனக்கு தரிசனம் தருமாறு வேண்டுவார். குழைவார். கெஞ்சுவார். சமயங்களில் ராமருடன் உரிமையாக கோபித்துக் கொள்வார். ஒரு நாள் மாறுவேடத்தில் ஸ்ரீராமர் வந்தார். அவருடன் அனுமனும் சீதையும் இருந்தார்கள். தியாகராஜருக்கு வந்திருப்பது ஸ்ரீராமன்தான் என்று புரியவில்லை. இருந்தாலும் அதிதி பூஜை செய்தார். இரவு உணவு உண்ணும் படி அவர்களை வற்புறுத்தினார். அவர்கள் அமர்ந்ததும், அனுமன் ஒவ்வொரு உணவையும் தன் கையால் வழங்க, தியாகராஜர் தானே உணவை வழங்குவதாக வற்புறுத்தி அவரை ஒதுக்க, அனுமன் திடுக்கிட, ராமர் அனுமனை அமைதிப்படுத்தினார். ஜாடையில் உன்னைப்போலவே தியாகராஜரும் சிறந்த பக்தர் என்றுகூறி, அவருக்கு சேவை செய்ய அனுமதி தந்தார்.

மத்வ சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயர்

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத் வைதம் எனும் மூன்று சம்பிரதாயங்களிலும் அனுமனுக்கு பிரதானமான இடம் உண்டு. அதிலும் ஹரி சர்வோத்தமா, வாயு ஜீவோத்தமா என்ற தாரக மந்திரம் கொண்ட மத்வ சம்பிரதாயத்தில் ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய இடம் உண்டு. எல்லா பிருந்தாவனங்களிலும் அனுமன் சந்நதியும் வழிபாடும் இருக்கும். மத்வ குருவான வியாசராயர் (வியாசராஜர்) இந்தியாவின் பல இடங்களில் ஆஞ்சநேயர் உருவங்களை பிரதிஷ்டை செய்திருக்கின்றார். வியாச ராயர் ஒரு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆஞ்சநேய கோயிலைக் கட்டினார் என்பார்கள். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமான் கோயில்களைக் காணலாம். வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமான் கோயில்களுக்கும், மற்ற அனுமன் கோயில்களுக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்னவென்றால், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமாருக்கு, தலைக்கு மேல் செல்லும் வால் முனையில் மணி இருக்கும் என்று மத்வ சம்பிரதாய அன்பர்கள் கூறுவார்கள்.

 

The post வீர மாருதி கம்பீர மாருதி appeared first on Dinakaran.

Related Stories: