×

வெ.இ.யை ஒயிட் வாஷ் செய்து இந்திய மகளிர் கெத்து! 3வது ஓடிஐயிலும் அமோக வெற்றி

வதோதரா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, 3வது ஒரு நாள் போட்டியிலும் மிக மோசமான தோல்வியை தழுவி ஒயிட் வாஷ் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி கடந்த 15ம் தேதி முதல், 3 டி20 போட்டிகளில் இந்தியாவுடன் மோதி மோசமான தோல்வியை தழுவி ஒயிட் வாஷ் ஆனது. அதைத் தொடர்ந்து, கடந்த 22ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, 211 ரன் வித்தியாசத்திலும், 24ம் தேதி நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் 115 ரன் வித்தியாசத்திலும் இந்தியா அபாரமாக வென்றது.

இதைத் தொடர்ந்து வதோதராவில் நேற்று 3வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். துவக்க வீராங்கனைகள் கியானா ஜோசப், கேப்டன் ஹேலி மாத்யூஸ் ஆகியோர் ரேணுகா சிங்கின் மந்திரப் பந்து வீச்சில் சிக்கி ரன் எடுக்காமல் அவுட்டாகினர். பின் வந்த ஷிமென் கேம்ப்பெல் 46 ரன் எடுத்தார். சினெல்லி ஹென்றி 61 ரன் சேர்த்தார். இருப்பினும் மற்றவர்கள் மோசமாக ஆடி சீரான இடைவெளியில் அவுட்டாகி நடையை கட்டினர். 38.5 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன் எடுத்தது. இந்தியாவின் தீப்தி சர்மா 31 ரன் தந்து 6 விக்கெட், ரேணுகா சிங் 29 ரன் தந்து 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள், 28.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32, ஜெமிமா ரோட்ரிகஸ் 29, தீப்தி சர்மா அவுட்டாகாமல் 39, ரிச்சா கோஷ் அவுட்டாகாமல் 23 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டாவது முறையாக இந்தியா ஒயிட் வாஷ் செய்து மகத்தான சாதனை படைத்துள்ளது. 6 விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா ஆட்ட நாயகியாகவும், ரேணுகா சிங் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

The post வெ.இ.யை ஒயிட் வாஷ் செய்து இந்திய மகளிர் கெத்து! 3வது ஓடிஐயிலும் அமோக வெற்றி appeared first on Dinakaran.

Tags : West Indies ,Vadodara ,West Indies women's cricket team ,India ,women's ,Dinakaran ,
× RELATED வெ.இ.மகளிருடன் 2வது ஓடிஐ இந்தியா அபார வெற்றி