- 48வது புத்தகக் கண்காட்சி
- சென்னை
- துணை
- உதயநிதி ஸ்டாலின்
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்
சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 900 புத்தக ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து இந்த கண்காட்சி ஜனவரி 12ம் தேதி வரை நடக்க உள்ளது. இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செலாளர் முருகன் அளித்த பேட்டி:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் டிசம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வைக்க ஒப்புதல் தெரிவித்து இருந்தார். அதன்படி திட்டமிட்டபடி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, அதன் மேலாண் இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். பதிப்பாளர் சங்கத்தில் இடம் பெற்றுள்ள 900 பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்காக 2 லட்சம் சதுரடியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் அரங்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அரங்கு, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், தொல்லியல் துறை, இல்லம்தேடிக் கல்வி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆ்ண்டு சென்னையில் நடந்த 47வது கண்காட்சிக்கு சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். அதன் மூலம் ரூ.21 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையானது.
இந்த ஆண்டு சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று கணக்கிட்டு புத்தாண்டுக்கு முன்னதாகவே தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே கண்காட்சியை நிறைவு செய்கிறோம். இதனால் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் புத்தகம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். கண்காட்சிக்கு வருவோருக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர் வந்து செல்லும் வகையில் 10 லட்சம் டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவ்வாறு செயலாளர் முருகன் தெரிவித்தார்.
* ‘சூரியன் பதிப்பக’ ஸ்டால் எண் 329, 330
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் தினகரன் நாளிதழின் சூரியன் பதிப்பக ஸ்டால் இந்த ஆண்டும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. சூரியன் பதிப்பகத்துக்காக 2 ஸ்டால்கள் (எண் 329 மற்றும் 330) ஒதுக்கப்பட்டுள்ளன. பொது அறிவு, சிந்தனைக்கு உரமளிக்கும் வகையில் முற்போக்கு எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ள, கருத்தாழம் மிக்க புத்தகங்கள், பொதுவுடைமை கருத்துகள் கொண்டதும், சமூக, சமத்துவத்துக்கான புத்தகங்கள், அரசியல் தலைவர்கள் பற்றியவை என படிப்போருக்கு புதிய பாதைக்கு வழிவகுக்கும் புத்தகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், வரலாறு மற்றும் புராணங்களில் புகழ் பெற்ற இடங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள்,
தமிழரின் ஐவகை நிலங்கள் மற்றும் அது சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளை தெள்ளத் தெளிவாக விளக்கும் புத்தகம், இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் நவீன கருத்துகள் கொண்ட புத்தகங்கள் என சூரியன் பதிப்பதகத்தில் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சூரியன் பதிப்பக புத்தகங்களை தபால் மூலம் வாங்கி பயன்பெற்ற வாசகர்கள், இந்த 48வது புத்தகக் கண்காட்சியில் நேரடியாவே வந்து பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை அவர்களின் விருப்பத்துக்கேற்ப வாங்கிக்கொள்ள முடியும்.
The post சென்னையில் நேற்று 900 புத்தக ஸ்டால்களுடன் 48வது புத்தக கண்காட்சி தொடங்கியது appeared first on Dinakaran.