×

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ‘புல்லட்’ யானையை ஆனைமலை கொண்டு சென்ற வனத்துறையினர்

பந்தலூர்: கூடலூர் வனக்கோட்டம் சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட சேரங்கோடு டேன்டீ, சிங்கோனா, நர்சரி, படச்சேரி, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையால் புல்லட் என்று அழைக்கப்படும் ஆண் யானை கடந்த பல நாட்களாக 40க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதம் செய்தது. மேலும் கடைகள், ரேஷன் கடைகள், விவசாய பயிர்களை சேதம் செய்வதும், கண்ணில்பட்ட வாகனங்களை தாக்குவதும், மக்களை ஆக்ரோஷமாக துரத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அட்டகாச யானையை கும்கிகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வந்த உத்தரவையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் புல்லட் யானை இருக்கும் இடத்தை டிரோன் கேமரா வைத்து கண்காணித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி பாதிரி மூலா பகுதியில் 3 வீடுகளை தாக்கிய புல்லட் யானை அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியது. இதை அடுத்து கும்கி யானைகள் சீனிவாசன், விஜய் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் அய்யன்கொல்லி பகுதியில் பதுக்கிய புல்லட் யானையை நேற்று மயக்க ஊசி செலுத்தினர்.

யானை சிறிது தூரம் சென்று நின்ற பின் கும்கி யானை உதவியுடன் புல்லட் யானையின் அருகே சென்று கால்களில் கயிறுகளை கட்டி மரத்தில் கட்டினர். இதை தொடர்ந்து லாரியில் ஏற்றி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு இன்று அதிகாலை கொண்டு சென்றனர். உடல் மருத்துவ பரிசோதனைக்கு பின் புல்லட் யானையை அடர்ந்த வனத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

The post மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ‘புல்லட்’ யானையை ஆனைமலை கொண்டு சென்ற வனத்துறையினர் appeared first on Dinakaran.

Tags : BANDALORE ,FOREST ,DANDEE ,SINGONA ,NURSERY ,PATACHERI ,SERAMBADI DANDI ,SERAMADI FOREST OF KOODALUR FOREST PARK ,Dinakaran ,
× RELATED கோவை வரப்பாளையத்தில் தாயை இழந்த...