துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது

ஈரோடு: மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண் துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கடம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (51). ஆப்பக்கூடலில் சர்க்கரை ஆலையில் வருவாய் துறை துணை தாசில்தாராக உள்ளார். இவருக்கு சென்னையை சேர்ந்த கலைவாணன் (37) என்பவர், கடந்த 2022 மார்ச் மாதம் அறிமுகம் ஆனார். கலைவாணன் தன்னை போலீஸ் டிஎஸ்பி என கூறியுள்ளார். அப்போது கலைவாணன், சுந்தராம்பாளின் மகன் சண்முகராஜூவுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய சுந்தராம்பாள் பல்வேறு தவணைகளாக ரூ.2 கோடி வரை கலைவாணனுக்கு வழங்கியுள்ளார். ஆனால், வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இதுகுறித்து சுந்தராம்பாள், கலைவாணனிடம் கேட்ட போது, மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சுந்தராம்பாள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக இருந்த கலைவாணனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: