மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசை கேட்க தைரியம் இருக்கிறதா? மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணியை தலைவராக்கியது ஏன்? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா என்றும், பாமகவில் மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணியை தலைவராக்கியது ஏன் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, தனது கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பேரம் பேசி வரும் ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள். எங்களது பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு, வன்னியர் சமூக மக்கள் மீது தங்களுக்கு பாசம் உள்ளது போல நீலிக்கண்ணீர் வடித்து நடித்திருக்கிறார் அன்புமணி.

கூட்டணி கட்சியிடம் பிளஸ் 1 என்ற ராஜ்யசபா சீட் ஒப்பந்தம் போட்டு அந்த சீட்டை அன்புமணிக்கு மட்டுமே தாரை வார்ப்பார்கள். ஒன்றிய அமைச்சர் பதவி என்றாலும் அதனையும் தன் மகன் அன்புமணிக்குத்தான் வாங்கிக் கொடுப்பாரா ராமதாஸ், இதுதான் ராமதாஸ் அவர்களின் வன்னியர் பாசமா, என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும். பாமகவிற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி போன்ற எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸை அடுத்த தலைவராக்கியது எதனால், தலைவர் பதவியில் இருந்த தீரன் எங்கே போனார், ஜி.கே.மணி வகித்த தலைவர் பதவியை எதற்காக பிடுங்கி அன்புமணிக்கு கொடுத்தார்கள். பாமகவில் வேறெவருமே அன்புமணி அளவிற்கு உழைக்கவில்லையா, என்று நாங்கள் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்.

வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுகவை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதற்கு முன்பு இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜ கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு அன்புமணி பேசுவாரா? அன்புமணி ராமதாசுக்கு உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவர் கை குலுக்கி உறவாடி கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜ அரசை பணியவைத்து, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த சொல்லுங்கள். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

The post மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மோடி அரசை கேட்க தைரியம் இருக்கிறதா? மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணியை தலைவராக்கியது ஏன்? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: