ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக காவேரிப்பட்டணம் நோக்கி வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி புறப்பட்டது. லாரியை கிருஷ்ணகிரி அடுத்த நெடுங்கல் மோட்டூரை சேர்ந்த பழனி(31) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் லாரி வந்துக்கொண்டிருந்தபோது திடீரென வைக்கோலில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பழனி, லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே குதித்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே லாரி முழுவதும் தீப்பற்றி கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதுபற்றி அவ்வழியாக சென்ற மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஓசூர் தீயணைப்பு துறையினர் மற்றும் சிப்காட் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. பின்னர் லாரியை அந்த பகுதியில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்தை சரி செய்ய வாகனங்களை சர்வீஸ் சாலையில் போலீசார் திருப்பி விட்டனர். தீவிபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பழனி லாரியில் இருந்து குதித்து தப்பியதால் அவருக்கு தீக்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓசூர் ஜூஜூவாடியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.