மாமல்லபுரத்தில் காந்தி சில்ப் பஜார் கண்காட்சி தொடக்கம்

திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரத்தில், மாவட்ட அளவிலான காந்தி சில்ப் பஜார் கண்காட்சி தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி (பூம்புகார்) மற்றும் கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையம் சார்பில், 7 நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான ‘காந்தி சில்ப் பஜார்’ என்ற கண்காட்சி மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் நேற்று தொடங்கி நடந்தது.

இக்கண்காட்சியை ஒன்றிய அபிவிருத்தி துணை இயக்குனர் தனராஜன் மற்றும் மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கல்லூரி முதல்வர் ராமன் ஆகியோர் துவக்கி வைத்து, பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து 50 கைவினை கலைஞர்கள் கலந்துகொண்டு பாரம்பரியமிக்க கைத்திறன் பொருட்கள் மற்றும் கைத்தறி துணி வகைகள் போன்றவற்றை பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர்.

இக்கண்காட்சியில், பஞ்சலோக சிலைகள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், காகித கூழ் பொருட்கள், நூல் தையல் வேலைகள், தேங்காய் ஓடு கலைப்பொருட்கள், ஓவியங்கள், சுடுமண்சிலைகள், தோல் பொருட்கள், இயற்கை நார்ப்பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கலை நயமிக்க நகை வகைகள் மற்றும் பல கைவினை பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை பார்வையிட வருவோருக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 23ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சியை காணலாம். இதில், அனைத்து வங்கி அட்டைகளும் எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாமல்லபுரத்தில் காந்தி சில்ப் பஜார் கண்காட்சி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: