பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வுகளை வேறு தேதியில் நடத்துங்கள்: ஒன்றிய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்


சென்னை: பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்த வேண்டும் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை அதன் யுஜிசி – நெட் தேர்வை ஜனவரி 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடத்த அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா ஜனவரி 13 முதல் 16 வரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது.  பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணாக்கர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும். மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் விடுத்த வேண்டுகோளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025க்கான பட்டயக் கணக்காளர்கள் அறக்கட்டளை தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

The post பொங்கல் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வுகளை வேறு தேதியில் நடத்துங்கள்: ஒன்றிய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: