மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, மேட்டுப்பாளையம் – ஊட்டி மற்றும் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு டிச.25, 27, 29, 31 ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு டிச.26, 28, 30, 1 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.