சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் தான், இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் எனவும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திநகர் பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணியைப் பொறுத்தவரை, மொத்தம் 1,254 மீட்டர் அமைக்க வேண்டும். ‘பெலிகன்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாகவும், ‘பிகாக்’ இயந்திரம் மூலமாகவும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மேம்பாலங்கள், மருத்துவமனைகள் அல்லது பழைய பாரம்பரிய கட்டிடங்கள் போன்ற முக்கியமான கட்டமைப்புகளைக் கடக்கும்போது, செயல்முறையை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் முன்பு, தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கம் – தியாகராய நகர் வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில் மாம்பலம் லாலா தோட்டம் 2வது தெருவில் வீட்டின் தரைப்பகுதி திடீரென உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ திட்ட இயக்குநர் அர்ஜூனன் கூறியதாவது : மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியின் 4வது வழித்தடமான பூந்தமல்லி – மெரினா கலங்கரை விளக்கம் வரையிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் முதல் திநகர் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களான பிகாக், பெலிகன் ஈடுபட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சுரங்கம் தோண்டும் பணியான அடுக்குமாடி கட்டிடங்கள், குடியிருப்புகள், அலுவலங்கள், வளாகங்களை என அனைத்தையும் கடந்து செல்கிறது. இந்நிலையில் மாம்பலம் லாலா தோட்டம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளமானது சுரங்கம் தோண்டும் இயந்திரம் செல்லும் பாதையில் உள்ள மண் கலவை வெளியேறியதால் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் வேறு இடத்தில் இடமாற்றம் செய்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் உள்வாங்கிய பள்ளத்தில் கான்கிரீட் கலவையை கொட்டி பள்ளத்தை நிரப்பப்பட்டுள்ளது. மேலும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் அந்த பகுதியிலிருந்து கடந்துள்ளது. அதேபோல் சுரங்கம் தோண்டு இயந்திரங்கள் செல்லும் பாதையின் 50 மீட்டர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டிடங்கள் விரிசல் ஏற்படுகிறதா எனவும் நில அதிர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மெட்ரோ பணி காரணமாக மாம்பலத்தில் திடீரென உள்வாங்கிய வீட்டின் தரைப்பகுதி: வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.