திருவாரூர், புதுகை, திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: காற்றாலை கருவி சேதம்

திருச்சி: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி டெல்டாவின் ஒரு சில இடங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சுற்றுவட்டார பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வலங்கைமான் அடுத்த சாந்தவெளி ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ஆலமரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. அதேபோல் புதுக்கோட்டை, இலுப்பூர், விராலிமலை, அன்னவாசல், அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி பகுதிகளிலும் நேற்றிரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பொழிந்தது. விராலிமலையில் 17, அன்னவாசலில் 31, இலுப்பூரில் 45 மிமீ மழை பதிவானது.

திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி, லால்குடி பகுதிகளில் இரவு லேசான மழை பெய்தது. மாநகரில் நள்ளிரவு 12 மணி முதல் இடி, மின்னலுடன் அரை மணி நேரம் மழை பெய்தது. துறையூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் மண்பறை வக்கீல் தோட்டம் அருகே தனியார் நிறுவனம் நிறுவியிருந்த காற்றாலை கருவியை மின்னல் தாக்கியது. இதனால் காற்றாலை கருவி தீப்பிடித்து எரிந்தது. 2 இறக்கைகள் எரிந்து சேதமடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு 55 கிமீ வேகத்தில் கடலில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இன்று 2வது நாளாக 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

The post திருவாரூர், புதுகை, திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: காற்றாலை கருவி சேதம் appeared first on Dinakaran.

Related Stories: