ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” 2023-2024ம் ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது ஆதிதிராவிடர்-பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான உன்னதமான திட்டம். தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும், 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது. இத்திட்டத்தில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 ஆதி திராவிட பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. தகுதியானவர்களான 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2023-24ம் நிதியாண்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1687 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024-25ம் நிதியாண்டில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1966 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதிதிராவிடர் குடியிருப்புகளைக் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளைக் கொண்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ரூபாய் 100 கோடி வீதம் ரூபாய் 200 கோடி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3,082 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டிற்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தொல்குடி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வீடற்ற பழங்குடியினருக்கு 750 வீடுகள் ரூ.40.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.
மேலும், இந்நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் இணைந்து வீடற்ற பழங்குடியினருக்காகக் கூடுதலாக 3,594 வீடுகள் கட்டப்படவுள்ளன.இப்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தனிக் கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலம் சார்ந்து புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாழம் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கல்வி, தொழில், பொருளாதாரங்களில் விரைந்து முன்னேறி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 1303 ஆதிதிராவிட தொழில் முனைவோருக்கு ₹160 கோடி மானியம்: ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை தகவல் appeared first on Dinakaran.