உக்ரைன் எல்லையில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள ரஷ்ய நகரம் மீது தாக்குதல்: டிரோன் மூலம் அதிரடி; விமான நிலையம் மூடல்; தீப்பற்றி எரிந்த கட்டிடங்கள்; மக்கள் வெளிவர 2 நாள் தடை

கீவ்: ரஷ்யாவின் டட்டர்ஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கசன் நகர் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் கைப்பற்றி உள்ளது. இதனால் இரு நாடுளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.

நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 9 பேர் படுகாயமடைந்தனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் டட்டர்ஸ்தான் பிராந்தியத்தின் கசன் நகரை குறி வைத்து உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் 8 டிரோன்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் வீடுகள் பலத்த சேதமடைந்தன. அடுக்கு மாடி கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. இன்னொன்று தொழிற்சாலை பகுதியில் விழுந்தது.

ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று டட்டர்ஸ்தான் ஆளுநர் தெரிவித்தார். உக்ரைனின் டிரோன் தாக்குதலால் கசன் நகரில் உள்ள விமான நிலையம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால், இன்றும்(நேற்று) நாளையும்(இன்று) டட்டர்ஸ்தான் நகர பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். டட்டர்ஸ்தானில் உள்ள கசன் நகர் உக்ரைன் எல்லையில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள பகுதியாகும்.

The post உக்ரைன் எல்லையில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள ரஷ்ய நகரம் மீது தாக்குதல்: டிரோன் மூலம் அதிரடி; விமான நிலையம் மூடல்; தீப்பற்றி எரிந்த கட்டிடங்கள்; மக்கள் வெளிவர 2 நாள் தடை appeared first on Dinakaran.

Related Stories: