மாக்டேபர்க்: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 5 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின்நகரில் இருந்து தென் மேற்கே 180 கிமீ தொலைவில் அமைந்துள்ள சக்சோனி-அன்ஹால்ட் மாகாணத்தின் மாக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணி அளவில் திடீரென பிஎம்டபிள்யு சொகுசு கார் ஒன்று கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் இடையே அசுர வேகத்தில் தாறுமாறாக ஓடியது.
சுமார் 400 மீ வரை தறிகெட்டு ஓடிய கார், பல கடைகள் மீது மோதி கண்ணாடிகளை சுக்குநூறாக்கி நடைபாதை அருகே நின்றது. உடனடியாக அங்கு குவிந்த போலீசார் துப்பாக்கி முனையில் காரை ஓட்டிய நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கார் மோதி 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 40 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த தலேப் (50) என்பது தெரியவந்துள்ளது.
இவர் மாக்டேபர்க்கில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பெர்ன்பர்க்கில் மனநல மருத்துவர் ஆவார். கடந்த 2006ம் ஆண்டு ஜெர்மனிக்கு குடிபெயர்ந்த இவருக்கு 2016ம் ஆண்டு அகதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர் பிஎம்டபிள்யு காரை வாடகைக்கு எடுத்து வந்துள்ளார். இந்த சம்பவத்தில் தலேப் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் மேற்கொண்டு எந்த அச்சுறுத்தலும் இல்லை என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
கைதான நபர் வேண்டுமென்றே மக்கள் கூட்டத்தில் காரை ஓட்டியதால், இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரிப்பதாக ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்துமஸ் சந்தைகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜெர்மனி உள்துறை அமைச்சர் நான்சி பியாசர் அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே கிறிஸ்துமஸ் சந்தைகள் தீவிரவாதிகளால் குறிவைக்கப்படலாம் என உளவுத்துறை எச்சரித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
* ஜெர்மனி அதிபரை விமர்சித்த மஸ்க்
இந்த தாக்குதலுக்கு ஜெர்மனி அதிபர் ஓல்ப் ஸ்கோலஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 40 பேர் படுகாயமடைந்திருப்பது கவலை அளிப்பதாகவும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உலகின் முன்னணி தொழிலதிபரான அமெரிக்காவின் எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில், ஜெர்மனி அதிபரை திறமையற்ற முட்டாள் என கடுமையாக விமர்சித்துள்ளார். கைதான சவுதி அரேபிய டாக்டரை குறிப்பிட்டு, ‘‘கொலைகாரனை நாடு கடத்த மறுப்பவர் கடுமையான தண்டனைக்கு தகுதியானவர்’’ என கூறி உள்ளார். மேலும், ஓல்ப் ஸ்கோலஸ் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்யவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
The post ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் பலி; 200 பேர் காயம்: 40 பேர் கவலைக்கிடம்; சவுதி டாக்டர் கைது appeared first on Dinakaran.