10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட முடிவு: அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம்

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தை மீண்டும் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என மலேசிய அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். மலேசிய ஏர்லைன்சின் எம்எச்- 370 போயிங் விமானம் 2014 மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது மாயமானது. மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. கிட்டத்தட்ட இந்தியப் பெருங்கடலின் 120,000 சதுர கிலோ மீட்டர் (46,332 சதுர மைல்) பரப்பளவு பகுதியில் தேடும் பணி நடந்தது.ஆனால் அதிக செலவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் விமானத்தின் சிதைவு பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விமான பாகங்கள் என கருதப்படும் பொருட்கள் கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை மற்றும் இந்திய பெருங்கடல் தீவுகளில் கரை ஒதுங்கின.இதனால் 2018ம் ஆண்டு தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று கூறுகையில்,‘‘மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவை சேர்ந்த ஓஷன் இன்பினிட்டி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய பெருங்கடலில் 15000 சதுர கிமீ பகுதியில் தேடும் பணி துவங்கும். புதிய ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனத்துக்கு ரூ.600 கோடி வழங்கப்படும். குறிப்பிடத்தக்க அளவில் பாகங்களை மீட்டால் தான் இந்த தொகை வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் தேடும் பணி துவங்கும்’’ என்றார்.

The post 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட முடிவு: அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: