கேரளா மருத்துவ கழிவுகள் மேலும் ஒருவர் கைது: லாரி பறிமுதல்

நெல்லை: நெல்லை அருகே கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் இடைத்தரகர் உட்பட 2 பேர் கைதான நிலையில், மேலும் சேலம் லாரி டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லையை அடுத்த சுத்தமல்லி, கொண்டாநகரம், நடுக்கல்லூர் அருகே கோடகநல்லூர் மேய்ச்சல் புறப்போக்கு நிலம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக சுத்தமல்லியைச் சேர்ந்த மாயாண்டி (42), மனோகர் (51) ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாயாண்டி கேரள நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நெல்லை வந்த கேரள மாநில அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை பார்வையிட்டு கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து பேசினர். அப்போது கலெக்டர், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி கொட்டிய கழிவுகளை கேரளத்திற்கே எடுத்துச் செல்ல வேண்டும்.

இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்நிலையில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மருத்துவக்கழிவுகளை கொட்டியது, சேலம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்லத்துரை (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லாரியை பறிமுதல் செய்து செல்லத்துரையை நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கேரளாவுக்கும் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் சென்று விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவனத்தினர் ஏற்பாட்டில் கேரளாவில் இருந்து லாரி இன்று நெல்லை வந்து இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளை அள்ளிச் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கேரளா மருத்துவ கழிவுகள் மேலும் ஒருவர் கைது: லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: