சின்னசேலத்தில் தற்கொலைக்கு முயன்றதோடு சாமி தீர்த்தம் என விஷம் கொடுத்து 5 பேரை கொல்ல முயன்ற சாமியார்

கள்ளக்குறிச்சி: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் முரளி (45). குறிசொல்லும் சாமியாரான இவர், தனது இளம் வயதிலேயே பெங்களூருக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகிலுள்ள அம்மகளத்தூர் கிராமத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார். பின்னர் அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் (61) என்பவருக்கும், முரளி சாமியாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர்.

கணேசன் வீட்டிலேயே பல வருடங்களாக, அவர் வசித்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள அம்மன், விநாயகர் கோயில்களில் விஷேச நாட்களில் பூஜை செய்து, பக்தர்களுக்கு குறிசொல்லியும் வந்துள்ளார். அவருக்கு ராமமூர்த்தி (32) என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் கோயில் செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், ஆடம்பர செலவுக்காகவும் அப்பகுதி மக்களிடம் பல லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படவே, முரளி சாமியாரிடம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு சில நாட்களாக அவரை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முரளி சாமியார் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார். மார்கழி வெள்ளியான நேற்று அதிகாலை குடியிருப்பு அருகிலுள்ள கோயிலில் பூஜை செய்வதுபோல் நாடகமாடி வீடு திரும்பிய முரளி சாமியார், ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த விஷதன்மை கொண்ட பவுடரை தண்ணீரில் கலந்து முதலில் குடித்துள்ளார்.

பின்னர் அதை சாமி தீர்த்தம் எனக் கூறி உதவியாளர் ராமமூர்த்தி, நண்பர் கணேசன், அவரது மனைவி ராஜாம்மாள் (60), மகன்கள் முத்தையன் (40), கண்ணன் (32) ஆகிய 5 பேரையும் அதிகாலையிலேயே எழுப்பி குடிக்க கொடுத்துள்ளார். அவர்களும் சாமி தீர்த்தம் என நம்பி குடித்துள்ளனர். பின்னர் 6 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு 6 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடன் விவகாரத்தில் 6 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தகவல்கள் பரவியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார், முரளிசாமியாரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோயிலுக்கு செலவு எனக்கூறி தனது ஆடம்பர செலவிற்காக வட்டிக்கு ஒரு கோடிக்கும் மேல் கடன் வாங்கியதாகவும், பணம் கொடுத்தவர்கள் வட்டியுடன் கடனை திருப்பி கேட்ட நிலையில், கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்ய முடிவு செய்து பாலிஷ் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

உதவியாளர், நண்பர் குடும்பத்தினரையும் கடன்காரர்கள் தொல்லை செய்வார்கள் என்பதால் விஷம் கொடுத்ததாகவும் வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து முரளிசாமியார் மீது கொலைமுயற்சி (307) பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விஷம் குடித்தவர்களில் 4 பேர் அபாய நிலையை கடந்து விட்டதாகவும், மற்ற 2 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post சின்னசேலத்தில் தற்கொலைக்கு முயன்றதோடு சாமி தீர்த்தம் என விஷம் கொடுத்து 5 பேரை கொல்ல முயன்ற சாமியார் appeared first on Dinakaran.

Related Stories: