கோவையில் தடையை மீறி பேரணி நடத்திய அண்ணாமலை உட்பட 920 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் தடையை மீறி பேரணி சென்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 920 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பு கைதி மற்றும் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா கடந்த 16ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து இவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பூ மார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததை கண்டித்து நேற்று முன்தினம் பாஜ கருப்பு தின பேரணி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

தடையை மீறி காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நிர்வாகிகள் நேற்று முன்தினம் குவிந்தனர். தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக அண்ணாமலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காட்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இரவில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் சிவலிங்கம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, பகுதி செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பாஜ மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 920 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ‘கோவையின் அமைதியை சீர்குலைக்க அண்ணாமலை சதி செய்கிறார்’
திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்லா சமூக, மத மக்களும் நிம்மதியாக வாழ்ந்து, தொழில் செய்துவரும் கோவையில் அண்ணாமலையும் அவரின் பாஜவும் மத கலவரங்களை தூண்டி குளிர் காய நினைக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சியில் தென் இந்தியாவின் சிறந்த ஊர் கோவை. கடந்த காலத்தில் தலைவர் கலைஞர் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து ஐடி நிறுவனங்களை கொண்டுவந்து கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்டார். தற்போதைய முதலமைச்சர் பல புதிய பன்னாட்டு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் புதிய பன்னாட்டு தொழில் வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளார்.

புதிய ஐடி பார்க், நூலகம், நகை தொழில் மையங்கள், மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலங்கள் என அடிப்படை வசதிகளை கொண்டு கோவை நகரை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்க திராவிட மாடல் அரசு திட்டமிட்டு இயங்குகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாது சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து தொழில் வாய்ப்புகளை தடுக்கும் மோடி அரசு சமீப நாட்களாக அண்ணாமலையை வைத்து மத கலவரங்களை தூண்டி சமூக பதற்றத்தை ஏற்படுத்தி யாரையும் கோவையை நோக்கி தொழில் செய்ய வரவிடக்கூடாது என எண்ணுகிறது. அண்ணாமலையின் சமீபகால நடவடிக்கை மற்றும் மத வெறுப்பு பிரசாரம் எல்லாம் பார்க்கிற போது கோவையில் சமூக பதற்றம் நிலவுவது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த முயல்கிறார். நிம்மதியாக வாழும் கோவை மக்களிடம் விஷத்தை விதைக்கும் கலவர புத்தியை அண்ணாமலை கைவிட வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

The post கோவையில் தடையை மீறி பேரணி நடத்திய அண்ணாமலை உட்பட 920 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: