ஈரோடு: தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் கள ஆய்வு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து காரில் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார்.
முதல்வர் வருகையையொட்டி, மாவட்ட எல்லையில் இருந்து ஈரோடு வரை வழிநெடுக கட்சியினரும், பொதுமக்களும் சாலையோரங்களில் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கடந்த 2021 ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தற்போதைய செயல்பாடு குறித்து, ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சனாபுரம் கிராமத்தில் கள ஆய்வு நடத்தினார்.
அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த ராமநாதன் மனைவி சுந்தராம்பாள் (58) வீட்டிற்கு நேரில் சென்று மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, சுந்தராம்பாளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து, வழங்கப்பட்டுள்ள மருந்து பெட்டகத்தில் உள்ள மாத்திரைகளை முறையாக சாப்பிட்டு உடல் நலனை பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து சுந்தராம்பாள் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரம் நடந்தே சென்று, இத்திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியான நஞ்சனாபுரத்தை சேர்ந்த காளியப்பன் மனைவி வசந்தா (60) என்பவரது வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று மருந்து பெட்டகத்தை வழங்கி, அவரது உடல் நலன் குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து, தைரியமாக இருக்கும்படி கூறினார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, எம்பி அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் மனிஷ் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
* ‘முதல்வரே என் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி’
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் முதல்வரின் கையால் மருந்து பெட்டகத்தை பெற்ற சுந்தராம்பாள் கூறியதாவது: நான் 3 மாதமாக உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்தேன். ஆனால், எனது கணவர் வாட்ச்மேன் வேலை பார்ப்பதால், தொடர்ந்து அவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட முடியவில்லை. கடந்த சில வாரத்திற்கு முன்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டிற்கு வந்து செவிலியர்கள் என்னை பரிசோதித்தனர்.
உயர் ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரைகள் மாதந்தோறும் வழங்குவதாக தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வரே எனக்கு நேரில் வந்து மருந்து பெட்டகத்தை வழங்குவார் என நினைக்கவில்லை. முதல்வர் எனது வீட்டிற்கு வந்து மருந்து பெட்டகத்தை வழங்கியது பிரம்மிப்பாக உள்ளது. என்னிடம் உடல் நலனை பார்த்து கொள்ளவும், தைரியமாக இருக்கும்படியும் கூறியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
* 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை அடைய அயராது பாடுபட வேண்டும்: முதல்வர் பேச்சு
ஈரோடு மேட்டுக்கடை அருகே தங்கம் மகாலில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், மக்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்களை கொண்டு செல்வது குறித்தும் கலந்துரையாடினர்.
மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கினை அடைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும். அதில், ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளையும் திமுக கைப்பற்றுவதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
* ‘ஐநா சபையே விருது வழங்கி கவுரவித்துள்ளது’
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், இத்திட்டத்தின், 50 லட்சமாவது பயனாளிக்கு சிட்லபாக்கம் பகுதியில் முதல்வரால் மருந்து பெட்டகம் தரப்பட்டது. 1 கோடியே 1வது பயனாளிக்கு திருச்சியில் முதல்வர் மருந்து பெட்டகத்தை வழங்கினார். தற்போது 2 கோடியாவது பயனாளி சுந்தராம்பாள் என்ற பெண்ணுக்கு முதல்வர் கையால் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 25ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐநா சபை, உலகில் தொற்றா நோய்க்காக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாக கூறி, 2024ம் ஆண்டுக்கான ஐநா மன்ற விருதும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ துறை பணியாளர்கள், டாக்டர்கள் பணி செய்கின்றனர் என்றார்.
* மாதந்தோறும் மின் கட்டணம் பரிசீலனையில் உள்ளது
ஈரோடு மேட்டுக்கடை அடுத்துள்ள பிச்சாண்டம்பாளையம் பகுதியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்திற்கு நேற்று மாலை சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட் வரை உயர்த்தி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறதா? என கேட்டார்.
அதற்கு உரிமையாளர் சிவக்குமார் தொழில் மேன்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். அதற்கு அத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் கூறினார்.
The post மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.