×

கே.வி.குப்பம் அருகே 2வது நாளாக பரபரப்பு சிறுத்தை தாக்கி கொன்ற பெண்ணின் சடலம் வாங்க மறுத்து மக்கள் தர்ணா

*அதிகாரிகள் சமரசம்

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி கொன்ற பெண்ணின் சடலம் வாங்க மறுத்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் 2வது நாளாக பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி துருவம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(70), விவசாயி.

இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 5 மகள்கள். இதில் 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், இளங்கலை வணிகவியல் பட்டதாரியான 5வது மகள் அஞ்சலி(22), நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

அப்போது, அங்கு வந்த சிறுத்தை அஞ்சலியை கடித்து குதறி கொன்றது. இதனைக்கண்ட உறவினர்கள் கூச்சலிட்டதால், சிறுத்தை தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்த சப்-கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் கே.வி.குப்பம் போலீசார், அஞ்சலியின் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் சடலத்தை எடுக்கவிடாமல் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு சென்ற கலெக்டர் சுப்புலட்சுமி, எஸ்பி மதிவாணன், மாவட்ட வன அலுவலர் குருசாமிதபலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அஞ்சலியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாலை 3 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் அஞ்சலியின் உடல் கொண்டுவரப்பட்டது. அப்போது சடலம் வாங்க மறுத்து அங்குள்ள ஆலமரம் பகுதியிலேயே 250க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்சை வழிமறித்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சப்-கலெக்டர் சுபலட்சுமி, தாசில்தார் சந்தோஷ், டி.எஸ்.பி பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் வனத்துறை அலுவலர் வினோபாவா உள்ளிட்டோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்த பகுதியில் சாலை வசதி, பஸ் வசதி ஏற்படுத்தி, வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தொடர்ந்து சப்-கலெக்டர் சுபலட்சுமி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும், வனத்துறை அதிகாரிகள் ₹10 லட்சம் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ₹1 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சப்-கலெக்டர் சுப்லட்சுமி தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து சிறுத்தை தாக்கி கொன்ற பெண்ணின் உடல் மாலை 5.15 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இரவு 7 மணியளவில் மூலங்காங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் 2வது நாளாக நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுத்தையை பிடிக்க கேமராவில் கண்காணிப்பு

சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்று காலை குடியாத்தம் வன அலுவலர் தலைமையிலான 15 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்குள்ள காப்பு காட்டில், வனவிலங்குகளை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிநவீன டிரோன் கேமரா மூலமும் வனத்துறையினர் தீவிரமாக சிறுத்தையை கண்காணிக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் வினோபாவா கூறுகையில், ‘சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப கேமராக்களில் கண்காணித்து வருகிறோம். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதற்கு அனுமதி பெற மாவட்ட வன அலுவலர் சென்னைக்கு சென்றுள்ளார். விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும்’ என்றார்.

The post கே.வி.குப்பம் அருகே 2வது நாளாக பரபரப்பு சிறுத்தை தாக்கி கொன்ற பெண்ணின் சடலம் வாங்க மறுத்து மக்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : K.V.Kuppam ,Vellore district ,Melmayil… ,
× RELATED விபத்தில் சிக்கி பலி வழக்கில்...