×

கடுமையான விதிகளை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது: ரூ.5000 கோடியில் பங்கு கேட்டதால் உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: பெங்களூரு இன்ஜினியரை பிரிந்து சென்ற மும்பை மனைவி பணம் கேட்டு மிரட்டியதால் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் ரூ.5000 கோடிக்கு மேல் சொத்து உள்ள போபால் தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா, பங்கஜ் மித்தல் அமர்வு விசாரித்து பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது. அதன்விவரம் வருமாறு: திருமணம் தொடர்பாக சட்டத்தில் உள்ள கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்கானது. ஆனால் கணவன் மீது பலாத்காரம், கிரிமினல் மிரட்டல் , திருமணமான பெண்ணை கொடுமைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்படுகிறது.

பெண்கள் தங்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களின் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் கணவர்களை தண்டிக்கவோ, அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ அல்லது மிரட்டி பணம் பறிக்கவோ பயன்படுத்தக்கூடாது. சட்ட விதிகளை சில பெண்கள் அவர்களது தனிப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் விசாரணை நீதிமன்றங்கள், குற்றம்சாட்டப்பட்டவரின் வயதான மற்றும் படுத்த படுக்கையான பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி உட்பட கணவரின் உறவினர்களைக் கூட போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்த வழக்கில் பிரிந்த கணவரின் சொத்து மதிப்பு ரூ. 5,000 கோடி என்றும், அவருக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல தொழில்கள் மற்றும் சொத்துக்கள் இருப்பதாகவும், அவரது முதல் மனைவி பிரிந்த போது குறைந்தபட்சம் ரூ. 500 கோடி கொடுத்திருப்பதாகவும், அதே அடிப்படையில் தனக்கும் ஜீவனாம்சம் வழங்க 2வது மனைவி கேட்டு இருக்கிறார். இந்த போக்கு சரியானது அல்ல. ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. இதில் எந்தவித சூத்திரமும் இருக்க முடியாது.

பரஸ்பர விவாகரத்து ஆணையின் மூலம் இறுதித் தீர்வுக்காக ரூ.8 கோடி வழங்க கணவர் ஒப்புக்கொண்டார். புனே குடும்ப நீதிமன்றம் மனுதாரருக்கு நிரந்தர ஜீவனாம்சத் தொகையாக ரூ. 10 கோடி மதிப்பிட்டுள்ளது. புனே குடும்ப நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர் கூடுதலாக ரூ. 2 கோடி செலுத்த வேண்டியுள்ளது. அவ்வளவுதான். அதே சமயம் அவர் மீது மனைவி தொடர்ந்த அனைத்து குற்ற வழக்குகளையும் ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கடுமையான விதிகளை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது: ரூ.5000 கோடியில் பங்கு கேட்டதால் உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Mumbai ,Bhopal ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து