×

காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா

சேலம், டிச.19: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் 47வது வார்டு ஆண்டிப்பட்டியில் 3 குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு போதிய அளவில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் கூடுதலாக பொது குடிநீர் பைப் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்ற காலை 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் மாநகராட்சி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மேயரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதுபற்றி பெண்கள் கூறுகையில், ‘‘தற்போது உள்ள குடிநீர் குழாயில் போதிய அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. கூடுதலாக 3பொது குடிநீர் குழாய் அமைத்து தரக்கோரி மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் மாநகராட்சிக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டோம். தற்போது கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளதால் தர்ணாவை கைவிட்டுள்ளோம்,’’ என்றனர்.

The post காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Salem ,Andipatti, Ward 47 ,Kondambatti Mandal ,Salem Corporation ,Dinakaran ,
× RELATED போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற தம்பதி