சென்னை: கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டினைக் கவனத்தில் கொண்டு இல்லங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, அதிகபட்ச விற்பனை விலை ரூ.1392 உள்ள 20 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.999 என்ற விலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பாக விற்க முடிவு செய்யப்பட்டு நேற்று அதன் விற்பனையை சென்னை அண்ணாநகர் அமுதம் மக்கள் அங்காடியில் அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். மஞ்சள்தூள், சர்க்கரை, பாஸ்மதி அரிசி, ரவை, மைதா, ஆட்டா, சூரியகாந்தி எண்ணெய், அமுதம் ஸ்பெசல் (பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, மராட்டி மொக்கு, கல்பாசி) வெல்லம், நெய், சேமியா, முறுக்கு மாவு, அதிரசமாவு, பிரியாணி மசாலா, கரம் மசாலா, சாம்பார் பொடி, இட்லி பொடி, பெருங்காயத்தூள், சிக்கன் 65 மசாலா, மீன் மசாலா ஆகிய பொருட்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த சிறப்பு மளிகைத் தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர், கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடிகளில் செயல்படுத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் தொடக்க விழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சிற்றரசு, சென்னை மாநகராட்சி 102-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு ரூ.999க்கு 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பு: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.