காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிய தலைவர் அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

கோவை:கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நமது பாரத தேசத்தில் காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிதாக மதிக்கக்கூடிய தலைவராக அம்பேத்கர் உள்ளார். அவரது புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவர் தந்த அரசியலமைப்பு சட்டத்தால்தான், இந்திரா காந்தியால் கூட ஜனநாயகத்தை அசைத்து பார்க்க முடியவில்லை. அந்த மகத்தான மனிதரின் புகழுக்கு ஒருபோதும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது. ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநிலங்களின் உரிமை ஒருபோதும் பறிபோகாது.

அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்வது அன்னையின் நலத்திற்கு எப்படி கேடோ, அப்படி அடிக்கடி தேர்தல் என்பது சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கேடு. அதனால் தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதுதான் முன்னேற்றத்திற்கான வழியாக இருக்கும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் 2 அரசியல் தலைவர்கள் (சீமான், தனியரசு) ஏதோ ஒரு பெரிய தியாகிக்கு மரியாதை தருவதுபோல கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த 2 தலைவர்களையும் தமிழக மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிய தலைவர் அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: